Tamil Nadu government should take action to restore the deteriorating student community! Dr. T. Devanathan Yadav, President of the India makkal kalvi munetra kazhagam
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வலியுறுத்தல்! வெளியிட்டுள்ள அறிக்கை:
‘’தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவ மாணவிகள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. போதை பொருட்களால் ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் சீரழிந்து வருகிறது. மாணவர்கள் மட்டுமல்லாது மாணவிகளும் மது அருந்துவது போன்ற செயல்கள் வேதனையளிக்கிறது. இவர்கள் தான் நாளைய இந்தியாவை கட்டமைக்க போகும் இளைஞர்களா?
கல்வி நிலையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் போதை பொருள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. பண போதையால் கண்மூடி தூங்கிவிட்டதா தமிழக அரசு? ஆபரேசன் கஞ்சா திட்டத்தின் மூலம் நாள்தோறும் கிலோ கனக்கில் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கூறும் காவல்துறை அதற்கு அடிமையான மாணவர்கள், இளைஞர்கள் அதிலிருந்து மீட்க எடுத்த நடவடிக்கை என்ன ? கஞ்சாவை போல் மாணவர்களை ஆட்கொண்டிருக்கும் பல போதை பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் ? பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் செயல்படும் கடைகளில் அதிரடி சோதனைகள் நடத்தாதது ஏன் ? இது போன்ற பல கேள்விகள் மனதில் எழுகின்றன.
மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதற்கு என்று தடை விதிக்கப்பட்டதோ அன்றே மாணவ சமுதாயம் சீரழிய தொடங்கிவிட்டது. ஆன்லைன் கல்வி என்ற பெயரில் கைப்பேசியில் மூழ்கியிருக்கும் மாணவர்கள் சில திரைப்படங்களை பார்த்து தீய வழிக்கு செல்கின்றனர். சீரழிவு பாதையில் சிக்கிக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும்.
போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டெடுக்க மன நல ஆலோசனை வழங்க வேண்டும். கல்வி நிலையங்களுக்கு அருகில் போதை பொருள் விற்கப்படாததை உறுதி செய்ய வேண்டும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை அளவுடன் கண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே மாணவ சமுதாயத்தை காக்க முடியும்’’ என குறிப்பிட்டுள்ளார்.