Tamil Nadu Transport Minister Sivasankar inaugurated the foundation stone for new projects at Rs.1.30 crore, completed works, bus route extension!
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தகுழி, சாத்தனுார், பிலிமிசை, குரும்பாபாளையம் மற்றும் அணைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்ட பணிகளையும் இன்று கலெக்டர் வெங்கடபிரியா முன்னிலையில் தொடங்கி வைத்தார். ஆலத்தூர் யூனியன் சேர்மன் என்.கே. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இலந்தகுழி பகுதியில் ரூ.22.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டத்தினையும், “நமக்கு நாமே“ திட்டத்தின்கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் அணைப்பாடி பகுதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டடத்தினையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
மேலும், பிலிமிசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கான பணிக்கும், சாத்தனூர் ஊராட்சியில் ரூ.39 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கும், குரும்பாபாளையத்தில் ரூ.20.10 இலட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுவதற்குமான பணிகளுக்கும் அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் முதல் கொளக்காநத்தம் வரையிலும், கொளக்காநத்தம் முதல் பெரம்பலூர் வரையிலுமான பேருந்தினை அயினாபுரத்திலிருந்து அணைப்பாடி வழியாக கொளக்காநத்தம் வழித் தடத்தில் நீட்டித்து இயக்கும் நிகழ்வினை போக்குவரத்துத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவ, மாணவிகளின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், காலை மற்றும் மாலையில் மாணவ, மாணவிகள் பேருந்தில் பயணம் சென்று பள்ளி செல்ல ஏதுவாக பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தத்திலிருந்து அணைப்பாடி வரை காலை 6.35 மணி அளவிலும், மாலை 4.45 மணி அளவிலும் ஒரு நாளைக்கு இரு நடைகள் பேருந்து செல்லும் வகையில் வழித்தட நீட்டிப்பு இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர் , அணைப்பாடி கிராமத்திலிருந்து கொளக்காநத்தம் வரை மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார்.
டி.ஆர்.ஓ. அங்கையர்கண்ணி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் (கும்பகோணம்) ராஜ்மோகன், ஆர்.டி.ஓ நிறைமதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில்குமார், போக்குவரத்துத் துறை துணை மேலாளர் சதீஸ்குமார், கோட்ட மேலாளர் இராமநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், இமயவரம்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் (ராகவன்)கொளக்காநத்தம் , அகிலாராமசாமி, (இலந்தைக்குழி), முத்துசாமி (பிலிமிசை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.