Tamil Nadu Transport Minister Sivashankar inaugurated the student hostels
பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மூலம் செங்குணம் தண்ணீர் பந்தல் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் தொழிற்பயிற்சி மாணவர் விடுதி கட்டிடத்தினையும், கீழ கணவாய் பகுதியில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் தொழில்நுட்ப மாணவர் விடுதி கட்டிடத்தினையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கற்பகம் தலைமையில் திறந்து வைத்தார்கள்.
இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சி.ராஜேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், பொறியாளர்கள் அணி பரமேஸ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, வேலூர் ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகை சிவசண்முகம், நெசவாளர் அணி பாலை.மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 34 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் / மாணவியர் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் 2,140 மாணவ,மாணவியர்கள் தங்கி பயில்வதற்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டதில் 2,052 மாணவ,மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
மேலும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்வதற்கு வசதியாக தலா 100 மாணவர்கள் தங்கிப் பயில 2 மாணவர் விடுதிகள் இன்று தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் பந்தல் தொழிற்பயிற்சி மாணவர் விடுதிக்கு 41 விண்ணப்பங்களும், கீழக்கணவாய் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதிக்கு 113 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
இந்நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.