Teachers are the ones who teach respect and customs: International businessman DATO S PRAKADEESH KUMAR‘s speech at the Independence Day ceremony!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் தாய்திருநாட்டின் 77 வது சுதந்திர தினவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக பூலாம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் சர்வதேச தொழிலதிபருமான டத்தோ பிரகதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது பூலாம்பாடிஅரசு மேல்நிலைப்பள்ளிக்கு என்ன தேவையோ அதை என்னிடம் தெரிவியுங்கள் அதை நான் செய்து தருகிறேன்.
நான் பயின்ற பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக வந்தது பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. என்னைப்போல இங்குள்ள பெரும்பாலானோர் பயின்றது இந்த பள்ளிதான். பெற்றோரிடம் இருப்பதை விட ஆசிரியரிடமே அதிக நேரம் இருக்கிறோம். நாங்கள் படிக்கும் போதெல்லாம் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது என்பையன் நல்லா படிக்கனும் அடிச்சு சொல்லிக் கொடுங்க என்பார்கள். ஆனால் இன்று அடித்தால் ஏன் என் பையனை அடித்தீர்கள் என பெற்றோர்கள் கேள்வி கேட்கிறார்கள் அது பெற்றோர்கள் செய்யும் தவறு .இன்றைய காலக் கட்டத்தில் மரியாதை பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை சொல்லித்தருவது ஆசிரியர்கள் தான்.
பெரம்பலூர் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளி என பூலாம்பாடி மேல்நிலைப்பள்ளி என்ற பெயர் எடுக்க வேண்டும். அதற்கு என்னால் முடிந்ததை செய்து தருகிறேன். மாணவர்கள் ஒவ்வொருவரும் சாதிக்ககூடியவர்கள் தான்.உங்களது வாழ்க்கையை நீங்கள் முடிவு செய்யனும். இன்றைய காலத்தில் படிப்புதான் மிக முக்கியம்.படிப்பு இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது. இன்று நீங்கள் கஷ்டப்பட்டால் பின்னால் நன்றாக இருக்க முடியும். என்னைப்போல நீங்களும் இதே பள்ளியில் சிறப்பு விருந்தினராக வரவேண்டும். என்னால் முடிந்தது உங்களாலேயும் முடியும். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மலேசியாவில் அரசுபள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே அரசுவேலை. அதே போல் கூடிய சீக்கிரம் இந்தியாவிலேயும் வரும் என எதிர்பார்க்கிறேன். அரசு பள்ளி ஆசிரியர்கள் அவர்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தாலே ஊரில் உள்ள அனைவரும் அவர்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள் என்றார்.
முன்னதாக டத்தோ பிரகதீஸ்குமார் சாரண சாரணிய இயக்க மாணவர்கள் வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் தொழிலதிபர்கள் இசைபாலு, டிகேஎஸ் ரமேஸ், பள்ளிதலைமை ஆசிரியர் முருகேசன், உதவி தலைமை ஆசிரியர் முரளி உள்ளிட்ட ஆசிரியர்களும், பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி, மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.