Tearful tribute poster for a woman alive in Perambalur: Police investigation!

பெரம்பலூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ்- விஜயலட்சுமி தம்பதியரின் மகள் அம்மு என்கிற ரோஷ்னி (வயது 24), இவருக்கு உறவினரான (தாய் மாமனின் மகன்) ஆத்தூர் காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த வீரராகவன் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதனையடுத்து கணவர் வீட்டில் ரோஷ்னி வசித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பணி நிமித்தம் காரணமாக ஓசூர் சென்ற வீரராகவன் அங்கு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மாமனார்- மாமியாருடன் இருக்க விருப்பமில்லாததால் ரோஷ்னி, கடந்த 7 மாதங்களாக பெரம்பலூரில், உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். ரோஷ்னிக்கு குழந்தைகள் ஏதும் இல்லாததால் திருமணத்தின் போது வரதட்சணையாக அளித்த நகைகள், பணம் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை வீரராகவனின் பெற்றோரிடம் ரோஷ்னியின் பெற்றோர் திரும்ப கேட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், ரோஷ்னி கடந்த அக். 7 அன்று, இரவு இயற்கை எய்தி விட்டார் என்ற சுவரொட்டி பெரம்பலூர் நகரின் பல பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரோஷ்னியின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் ரோஷ்னி உயிரோடு தான் இருக்கிறார் என்றும், முன் விரோதம் காரணமாக எவரேனும் பழிவாங்கும் நோக்கில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி இருக்கலாம் என்றும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரோடு இருக்கும் இளம் பெண் ஒருவர் இறந்து விட்டார் என கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!