Telangana state assembly dissolution
தெலங்கானா மாநில சட்டப் பேரவை கலைக்கப்பட்டது. காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் நீடிக்க ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட தெலங்கானா, முதல் முறையாக கடந்த 2014-இல் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் முதல்வரானார்.
அவரது தலைமையிலான அரசின் 5 ஆண்டுகள் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவைடைகிறது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் தெலங்கானா சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், மக்களவைத் தேர்தலுடன் தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலை சந்திப்பதற்கு சந்திரசேகர் ராவ் விரும்பவில்லை. அதற்காக, முன்கூட்டியே பேரவைத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக, சட்டப் பேரவையைக் கலைப்பதற்கு அவர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அண்மையில் பல்வேறு நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இதனால், அவர் பேரவையைக் கலைக்க முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசிய சந்திரசேகர் ராவ், கட்சியின் நலன் கருதியும், மாநில மக்களின் நலன் கருதியும் பேரவையைக் கலைப்பதற்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர்களும், அமைச்சர்களும் தனக்கு வழங்கியிருப்பதாகக் கூறினார். பொதுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, அமைச்சரவையைக் கூட்டி, பல்வேறு நலத் திட்ட உதவிகளை அறிவிப்பற்கு சந்திரசேகர் ராவ் ஒப்புதல் பெற்றார்.
இந்நிலையில், தெலங்கானா சட்டப் பேரவையைக் கலைப்பது குறித்து முடிவெடுப்பதற்காக, அந்த மாநில அமைச்சரவை இன்று வியாழக்கிழமை காலை கூடி விவாதித்தது. சந்திரசேகரராவ் தலைமையிலான தெலங்கானா பேரவையை கலைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அமைச்சரவையை கலைப்பது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பேரவையை கலைக்கும் பரிந்துரை கடிதத்தை ஆளுநர் நரசிம்மனிடம் வழங்கும்படி அமைச்சரவை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவைக கேட்டுக கொண்டது. அதன்படி பரிந்துரை கடிதத்தை ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று மதியம் வழங்கினார்.