tents without water! Display the pots without the banners !!|| தண்ணீரே இல்லாத தண்ணீர் பந்தல்கள் ! சட்டிகளே இல்லாமல் தட்டிகளே காட்சி !!

தண்ணீர்ப் பந்தல் என்பது கோடைக்காலத்திலோ, திருவிழா நாட்களிலோ தனிநபர்களாகவோ, மக்களின் தாகம் தணிக்க சேவை மனப்பான்மையுடன் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி இலவசமாக தாகம் தீர்க்க தண்ணீர் வழங்கப்படுகின்ற இடம், வசதி மிகுந்தவர்கள், சிலர் நீர், மோர், பானங்களுடன் பந்தல் அமைப்பதும் உண்டு.

ஓலைப் பந்தலிலோ அல்லது நிழல் உள்ள குளிர்ந்த இடத்திலோ மணல் குவித்து அதன்மீது மண்பாணையில் தண்ணீர் ஊற்றி வைக்கப்படும். சில இடங்களில் மர நிழலில் நிரந்தரமாக கற்பலகை கொண்டு அமைக்கப்பட்ட பழைய நீர்த் தொட்டிகளும் உண்டு.

தண்ணீர் பந்தல்கள் பெரும்பாலும் சாலை ஓரமாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் அமைக்கப்படுவது வழக்கம். திருவிழா காலங்களில் திருவிழா நடக்குமிடங்களில் கூடும் மக்கள் தாகம் தணிக்கவும் தண்ணீர்ப் பந்தல்கள், நீர் மோர்ப் பந்தல்கள் அமைக்கப்படுவதுண்டு.

தமிழகத்தில் பழங்காலத்திலிருந்தே தண்ணீர் பந்தல் அமைக்கும் வழக்கம் இருக்கின்றது. திருவிளையாடல் புராணத்தில் கூட, 35வது படலமான தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் என்னும் கதையில் பாண்டிய வீரர்களுக்கு சிவபெருமானே தண்ணீர்ப்பந்தல் வைத்தது தாகம் தணித்ததாக கதையும் உள்ளது. பெரிய புராணத்தில் அப்பர் பெயரில் அப்பூதியடிகள் தண்ணீர்ப்பந்தல் அமைத்து அறப்பணி செய்ததாக அப்பூதியடிகள் வரலாறில் கூறப்பட்டுள்ளது.

தற்போது சேவை மனப்பான்மையுடனோ, சமூக அக்கறையுடனோ பெரம்பலூரில் கோடை காலத்தை முன்னிட்டு, தற்போது பல தனியார் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஆத்தூர் சாலை விளாமுத்தூர் பிரிவு சாலை, ரோவர் வளைவு உள்ளிட்ட பலப்பகுதிகளில் தன்னார்வத்துடன் பெரும் மனதுடன் வசதி மிக்கவர்கள் மற்றும் நடிகர் சங்கங்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் காலை, மதியம், மாலை, ஆகிய மூன்று வேளைகளிலும், தண்ணீர் வழங்கி வருகின்றனர்.

ஆனால், சிலர் விளம்பரங்களுக்காக தண்ணீர் பந்தல்களை திறப்பதும், விளம்பரத்திற்காக போட்டோ எடுத்து கொண்டு பின்னர், தண்ணீரே இல்லாமல் பந்தல்களை வைத்திருப்பது மக்களை ஏமாற்ற மடைய செய்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!