The abolition of bonded labor system was reviewed in perambalur

பெரம்பலூரில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பாக மாவட்ட அளவிலான அனைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழித்து அவர்களின் மறுவாழ்விற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் மறுவாழ்விற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் சுதந்திரமாக வாழ உரிய வழி செய்திட தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொத்தடிமை தொழிலாளர் முறையினை ஒழித்தல் சட்டத்தினை தீவிரமாக அமல்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மேலும், மாவட்ட அளவிலான உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கி தீவிரமாக செயல்பட்டு கொத்தடிமை முறையை நீக்குவதை அனைத்துத்துறை அலுவலர்களும் கண்காணித்து வரவேண்டும்.

மேலும் மிகவும் பின்தங்கிய மற்றும் கொத்தடிமை முறையால் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பான சட்டங்கள் மற்றும் அதன் உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகள் அலுவலர்களுக்கும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் சட்டம் குறித்து பயிற்சி மூலமாக விரிவாக அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

மாவட்ட அளவில் கொத்தடிமை தொழிலாளர் முறையினை ஒழிக்க உருவாக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தினை அமல்படுத்துவதற்காக கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு நிதி என்ற பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு, உரிய நிதியை பெற்று திட்டங்கள் செயலாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கொத்தடிமை தொழிலாளர் விடுவிப்பு நடவடிக்கைகளாக கொத்தடிமை தொழிலாளர் பணிபுரிவது கண்டறியப்படின் மாவட்ட கண்காணிப்புக் குழு மற்றும் துணை கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கொத்தடிமை தொழிலாளார் மீட்கப்படின் காவல் துறையினால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகைகள் மற்றும் மறுவாழ்வு தேவைகளுக்கான அடிப்படை வசதிகளையும், அவர்களுக்குண்டான நலத்திட்டங்களை சம்மந்தப்பட்ட துறைகள் பெற்றுத் தந்து, அவர்களின் வாழ்வை மீட்டுத் தர ஆவண செய்யவேண்டும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், தொழிலாளர் ஆய்வாளர் பாலதண்டாயுதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஸ்ரீராம், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. தமிமுன்னிசா, பொது மேலாளர் (பொ) (மாவட்ட தொழில் மையம்) திரு.ஷெரீப் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!