மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.3,000- வீதம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு சர்வதேச அல்லது தேசிய அளவு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். இப்போட்டிகளில் முதலிடம் அல்லது இரண்டாமிடம் அல்லது மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தங்களது இளவயது காலங்களில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர் ஆவர். முதியோருக்கான போட்டிகள் மற்றும் அழைப்புப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியில்லை.
மேலும் 2015 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/- (ரூபாய் ஆறாயிரம் மட்டும்)-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை. ஓய்வூதியப் படிவத்தை எச்சூழ்நிலையிலோ, அடிப்படையிலோ, நிராகரிக்கவோ அல்லது தள்ளுபடி செய்யவோ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உரிமை உண்டு. விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தில் கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை 31.01.2016-க்குள் விண்ணப்பதாரர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் ஒப்படைத்தல் வேண்டும். நலிந்த நிலையிலுள்ள தலைசிறந்த வீரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.