The certificate verification for direct appointment to the posts of laboratory assistant

31.05.2015 அன்று நடைபெற்ற ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் 24.03.2017 அன்று தேர்வுத் துறை இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு 01.04.2017 அன்று வெளியிடப்படுகிறது.

இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடைமுறையில் உள்ள இனசுழற்சி மற்றும் விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் மிகுந்த கவனத்துடன் தயார் செய்யப்பட்டுள்ளது.

இப்பட்டியல் தற்பொழுது நடைமுறையில் உள்ள Vertical, Horizontal Reservation முறையில், மகளிர், ஆதரவற்ற விதவை, முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு 20 சதவீத தமிழ்வழியில் பயின்றோருக்கான இட ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை பெற்றவருக்கும், முன்னுரிமையற்றோருக்கும் இடையேயான 1:4 என்ற விகிதாச்சாரம் ஆகியவற்றை இனசுழற்சி முறையுடன் கடைபிடித்து தயார் செய்யப்பட்டுள்ளது.

இப்பட்டியல் 01.04.2017 அன்று முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட உள்ளது. மேலும் http://perambalur.nic.in என்ற இணையதளத்திலும் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணி 09.04.2017 ல் துறையூர் ரோடு, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், தெரிவித்துள்ள நெறிமுறைகளின்படி சான்றிதழ் சரிபார்ப்பின்போது எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்கள், வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முதல் 2 ஆண்டு முடிய காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 2 ஆண்டு முதல் 4 ஆண்டு முடிய காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 4 ஆண்டு முதல் 6 ஆண்டு முடிய காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும், 6 ஆண்டு முதல் 8 ஆண்டு முடிய காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும், கூடுதல் கல்வித் தகுதிகளாக மேல்நிலைக் கல்வித் (+2) தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலைப் பட்டம் அதற்கு மேலும் பெற்றவர்களுக்கு 3 மதிப்பெண்களும் வழங்கப்படும். மேலும் முன் அனுபவம் (ஆய்வக உதவியாளராக ) அடிப்படையில் 2 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

இப்பதவிக்கான தேர்விற்கு, விண்ணப்பிக்கும் இறுதி நாளான 06.05.2015 வரையில் தகுதியுள்ள 1. வேலைவாய்ப்புப் பதிவு முன்னுரிமை 2. உயர் கல்வித் தகுதி 3. ஆய்வக உதவியாளர் பணியில் பணி அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்பபடையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளிற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்திற் கொள்ளப்பட மாட்டாது.

ஆய்வக உதவியாளர் பணியில் பணி அனுபவத்தைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 06.05.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், பள்ளிக் கல்வித்துறையின் கீழுள்ள பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருப்பின் பணி அனுபவச் சான்றில், தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருப்பின் பணி அனுபவச் சான்றில், தொடர்புடைய மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற வேண்டும்.

இத்தகைய பணி அனுபவச் சான்றுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதி பெற்ற பணிநாடுநர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின்போது வழங்கப்பட்ட Weightage மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merit List) தயார் செய்யப்படும். அத்தகுதிப் பட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி மற்றும் இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்களுக்கு, உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும், என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!