The court canceled the moratorium to raise hens confined in the cage resolution demanding farmers meeting
கோழிகளைக் கூண்டில் அடைத்து வளர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோழிப்பண்ணையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், தலைமை அலுவலகக் கட்டிடம் மற்றும் தானியக்கிடங்கு திறப்பு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க
தலைவர் சின்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
சங்க நிறுவனத்தலைவரும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை மேலாண்மைக்குழு உறுப்பினருமான கரயைன்புதூர் நல்லதம்பி முன்னிலை வகித்தார். சங்க துணைத்தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார். செயலாளர் சுந்தர்ராஜ் செயல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் இளங்கோ ஆண்டறிக்கை வாசித்தார்.
முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் சிங்கராஜ், தீவன மூலப்பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் பழனிவேல், முட்டை சொசைட்டி தலைவர் நாகராஜன், எக் டிரேடர்ஸ் அசோசியேசன் தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட்டில் உள்ள கோழிநோய் ஆய்வகத்தை முட்டை ஏற்றுமதிக்கு சான்றிதழ் அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த ஆய்வகமாக மாற்றியமைக்க வேண்டும். கோழித்தீவன மூலப்பொருட்களான சோயா, கடுகு, சூரியகாந்தி உள்ளிட்ட புண்ணாக்கு ரகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரியை முழுவதும் ரத்துசெய்ய வேண்டும்.
கோழிகளைக் கூண்டில் அடைத்து வளர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சேலத்தில் இருந்து திருச்சி செல்ல பொம்மைக்குட்டைமேடு அருகில் இருந்து பை-பாஸ் சாலை அமைக்க வேண்டும்.
கோழிப்பண்ணைகளுக்கு விதிக்கப்படும் சொத்து வரியை முழுமையாக நீக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரளான சங்க நிர்வாகிகள் மற்றும் கோழிப்பண்ணையளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.