The decision of the farmers union meeting to show the black flag of Karnataka Chief Minister for Srirangam
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு நிர்வாகிகள் அவசரக் கூட்டம் திருச்சி பிரஸ் கிளப்பில், கவுரவ தலைவர் தீட்சதர் பாலு தலைமையில் நடைபெற்றது. தலைவர் பி.ஆர்.பாண்டியன் காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து எடுத்துரைத்தார். மகாதானபுரம் இராஜாராமன் 1997ல் ஏப்ரல் 4 ல் சட்ட மன்றத்தில் மேதாட்டு அனை கட்ட கர்நாடகாவிற்க சட்டப்படி உரிமை கிடையாது எனவும் ராசி மணல் அனைகட்டி கொள்ள தமிழகத்திற்கு உரிமை உண்டு என அன்றைய பிரதமர் தேவேகவுடாவிடம் தெரிவித்ததாக முதல்வர் கலைஞர் குறிப்பிட்டுள்ளார் என கலைஞர் சட்டமன்ற பேச்சு குறிப்பு புத்தகத்தை ஆதாரமாக காட்டி பேசினார்.
பொதுச் செயலாளர் பாலாறு வெங்கடேசன்,தமாக விவசாய பிரிவு தலைவர் புலியூர் நாகராஜ், பொருளாளர் எஸ்.ஸ்ரீதர், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி, மலைவாழ் விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஏற்காடு ராமர்.மண்டல தலைவர்கள் மதுரை ஆதிமூலம், திருச்சி வயலூர் இராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கள் நாகை எஸ்.இ ராமதாஸ், திருச்சி ஹேமநாதன், தஞ்சை எம்.மணி, மதுரை மேலூர் அருன் , தேனீ திருப்பதிவாசகன், நாகை வடக்கு விஸ்வநாதன், மாவட்ட தலைவர்கள் திருச்சி பாருக், திருவாரூர் சுப்பையன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
2019 ஜனவரி 1ல் ஓசூரிலிருந்து ஆயிரக் கணக்கான விவசாயிகள் மேகதாட்டு அனை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பேரணியாக சென்று முற்றுகைப் போராட்டம் நடத்துவது. அன்றைய தினத்தை தமிழகத்தில் கருப்பு தினமாக அறிவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
மேலும் வரும் 18ம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க வரும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டது.
மேலும் 9 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அஞ்சலி தீர்மானம்..
கஜாபுயல் தாக்குதலால் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் விவசாயம், தென்னை மரங்கள் பாதிப்பினை அறிந்து தற்கொலை, அதிர்ச்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவிக்கிறது.
நெல் இரா.ஜெயராமனுக்கு அஞ்சலி..
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மாநில துணை தலைவரும், தமிழக இயற்கை உழவர் அமைப்பு பொதுச் செயலாளரும், நமது நெல்லை காப்போம், கிரியேட் அமைப்புகளின் தமிழக ஒருங்கினைப்பாளருமான நெல் இரா.ஜெயராமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு அஞ்சலியையும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
கஜாபுயல் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்திடுக..
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. அழிவை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய, மாநில அரசுகள் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க மறுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே இனியும் காலம் கடத்தாமல் உடன் அறிவித்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
தென்னை மரம் 1க்கு ரூ. 5000ம் இழப்பீடு ..
கஜாபுயல் பாதிப்பால் காவிரி டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 1 கோடிக்கு மேல் தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்துள்ளது. முதலில் 43 லட்சம் மரங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது, ஒருவிவசாயிக்கு 2 ஹெக்டேர் என்றும் 175 மரங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கபடும் என அறிவித்தது. இதனை அறிந்து நமது சங்கத்தின் சார்பில் பாதிப்பின் விபரங்களை தொடர்ந்து ஆதாரத்துடன் எடுத்துரைத்ததோடு, பட்டுக்கோட்டையில் தமிழக தென்னை உழவர்கள் சங்கம் சார்பில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகு தற்போது 4 மாவட்டங்களில் 73 லட்சம் மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி தலா ஒருவருக்கு 200 மரங்கள் வரை மரம் 1 க்கு ரூ. 1100 என்றும் அதற்கு மேல் தலா மரம் 1க்கு ரூ. 1000 என 700 மரங்கள் வரை நிவாரணம் வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் மரம் 1க்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கோரிக்கையின் நியாயத்தை உணர்கிற தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. எனவே இதனை மறுபரிசீலினை செய்திட தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களும், காயர் வாரிய தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களும் மரம் 1க்கு ரூ 3000ம் வீதம் மத்திய அரசின் தென்னை வாரியம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு நம்பிக்கையும் , ஆறுதலும் அளிக்கிறது. விவசாயிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப உடன் வழங்கிட மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
நெல் பயிர் ஏக்கர் 1க்கு ரூ 25000 ம் இழப்பீடு வழங்கிட..
கஜா புயல் பாதிப்பால் சுமார் 5லட்சம் ஏக்கரில் 70% மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக புயல் பாதிப்பு காலத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் சாய்ந்து அழுகி விட்டது., காய் கட்டும், தண்டு உருளும் தருவாயில் இருந்த பயிர்கள் தற்போது 70% பதராக கதிர்வர தொடங்கியுள்ளதை பார்த்து விவசாயிகள் மனமுடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு நெல் பாதிப்பு குறித்து உரிய கணக்கெடுப்பு நடவடிக்கைகளை வெளிப்படையாக துவங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விளை நிலங்களுக்கும் ஏக்கர் 1க்கு ரூ 25,000 ம் இழப்பீடு வழங்கிட தமிழக அரசை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.
விவசாயிகள் கடன் முழுவதும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்திடுக..
கஜாபுயல் மட்டுமின்றி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வறட்சி மற்றும் இயற்க்கை சீற்றங்களாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அரசுகளால் அறிவிக்கப்பட்டதே தவிர கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் மறுத்து விட்டன. மேலும் தமிழக அரசு கூட்டுறவு கடன்களை மத்திய கால கடன்களாக மாற்றம் செய்து வட்டியில்லா கடனுக்கு வட்டி அபராத வட்டி என நிர்ணயம் செய்து விவசாயிகள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் வசூல் முகவர் அனுமதி பெற்றுள்ள ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் குண்டர்களை ஏவி கட்டாய வசூல் நடவடிக்கையில் ஈடுபடுவதும், ஒரு சில விவசாயிகள் அடித்து கொலை செய்யப்படுவதும் தொடர்கிறது .மேலும் சில வங்கிகள் தற்போதும் கூட கட்டாய வசூல் பணிகளில் ஈடுபடுவதும், நீதிமன்றம் மூலம் மிரட்டுவதும், விளை நிலங்களையும், நகைகளையும் ஏலம் விடுவதாகக்கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளே நிலம், நகை மோசடி நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபடுவதும் தெரிய வருகிறது. எனவே ரிசர்வ் வங்கி மூலம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்க்கொண்டு கட்டாய கடன் வசூல் நடவடிக்கையை தடுத்து நிறுத்திட வேண்டுகிறோம்.
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் முழுவதையும் நிபந்தனையின்றி உடன் தள்ளுபடி செய்திட வலியுறுத்துகிறோம்.
காவிரி – மேகதாட்டு அணை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்திடுக
கர்நாடக அரசு திட்டமிட்டு தமிழகத்தை அழிக்கும் நோக்கோடு ஏற்கனவே 6க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியும், 3000 க்கும் மேற்பட்ட ஏரிகளையும் உருவாக்கி தடுத்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசோடு கூட்டு சேர்ந்து மறைமுக சூழ்ச்சியில் ஈடுபட்டு வந்தது. உச்ச நீதிமன்றம் மூலம் தமிழக நலனுக்கு ஆதரவான பல்வேறு உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றியும் கண்டது. ஆனால் இறுதி வரை காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை தடுத்தும் வந்தனர்.
பிறகு அமைக்கப்பட்ட ஆணையத்தை செயல்படவிடாமல் தடுக்கும் முயற்ச்சியிலும் ஈடுபட்டது. ஆணையம் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றவும் மறுத்து வருகிறது. உதாரணமாக இதுவரையில் கண்காணிப்புக் குழு அலுவலகம் பெங்களுரில் செயல்பட அனுமதிக்கவும் இல்லை. அணையின் நிர்வாக அதிகாரத்தை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படாமல் ஆணையம் கூட்டம் மட்டும் சடங்காகவே நடத்தப்பட்டு வந்தது. இதனால் சட்டப்படி வழங்க வேண்டிய மாதாந்திர அடிப்படையிலான உரிய தண்ணீரை வழங்கவும் மறுத்து விட்டது. உபரி நீர் மட்டுமே விடுவிக்கப்படுகிறது. அதனையே ஆணையமும் கணக்கில் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகம் வழியாக கடலில் சென்று கலந்து வீணாகும் தண்ணீரை தமிழகத்தில் அணைகட்டி தடுக்க இயலாத சமவெளிப் பகுதி என்பதால் மேகதாட்டுவில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்க உள்ளதாக மோசடி நாடகமாடி தமிழகத்தை அழிக்க துடிக்கிறது. இத் துரோக செயலுக்கு அரசியல் லாப நோக்கோடு சட்டத்திற்கு புறம்பாக, ஆணையத்தை முடக்கும் மறைமுக சூழ்ச்சியாக நீர்வளத்துறை ஆணைய செயலாளர் மசூத் உசேன் மூலம் அனுமதி கொடுத்து ஜனநாயகப்படுகொலை செய்துள்ளது. மேலும் மசூத் உசேனை ஆணைய தலைவராகவும் உள்ளதால் ஆணையக் கூட்டமே கேலி கூத்தில் முடிந்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும்,
ராசிமணல்
தமிழக நலனில் அக்கரையோடுதான் கர்நாடகம் அணைகட்டுமேயானால் தமிழகம் தனது எல்லையான ராசி மணலில் அணைகட்டிக் கொள்ள ஒத்துழைப்பு கொடுத்து மேகதாட்டு அணைகட்டும் நடவடிக்கையை கர்நாடகம் கைவிட முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தமிழக அரசுக்கு பாராட்டு
இந்நிலையில் மேகதாட்டு அணை கட்ட வரைவு திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை ரத்து செய்வது, மசூத் உசேனை மாற்ற வேண்டும் என்பன குறித்து தமிழக அரசு மேற்க்கொண்டுள்ள அனைத்து அவசர சட்ட, சட்டமன்ற நடவடிக்கைகளையும் முழு மனதோடு வரவேற்கிறோம்.
மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளதை பின் பற்றியும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மேகதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும், தமிழக அரசு ராசி மணலில் அணை கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். பிறகு எம் ஜி ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தலைவர்
பழ.நெடுமாறன் அவர்களால் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட ராசிமணல் அணை கட்டுவதற்கான தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகம் நோக்கி வரும் காவிரி தண்ணீரை கர்நாடகம் தடுப்பதற்கு சட்டப்படி உரிமையில்லை. ஆனால் தமிழகத்திற்குள் ஓடும் தண்ணீரை தடுத்து அணைக் கட்டிக் கொள்ள தமிழகத்திற்கு சட்டப்படியான உரிமை உள்ளது.அதன் அடிப்படையில் ராசி மணல் அணைக்கட்டுமானப் பணிக்கு வரைவு திட்ட ஆய்வறிக்கை தயார் செய்ய மத்திய அரசின் அனுமதி பெறுவதற்க்கான முயற்ச்சியினையும் தமிழக அரசு உடன் துவங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
முல்லைப் பெரியாறு பாசனத்தை அழிக்கும் புதிய அணை தடுத்திடுக..
முல்லைப் பெரியாறு அணை 152 அடி கொள்ளளவு உயர்த்தப்பட்டால் தேனி மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்கள் பாசனம் பெறுவதோடு, நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் சுமார் 2 கோடி மக்கள் குடிநீர் தேவை உறுதிப்படுத்தப்படும். சுமார் 10லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெறும். பொருளாதாரம் உயரும் .இதனை தடுக்கும் நோக்கோடு கேரள அரசு 142 அடி கொள்ளளவை உயர்த்த விடாமலும், 152 அடி கொள்ளளவை உயர்த்துவதற்க்கும் சட்டத்திற்கு புறம்பாக மறுத்து வந்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் முடிவுக்கு வந்த நிலையில் விவசாயிகளின் தீவிரப் போராட்டத்தால் 142 அடி கொள்ளளவை உயர்த்திக் கொள்ள அனை வலுவாக உள்ளது என்றும்.152 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கு முன் பேபி அணையை தமிழக அரசு பலப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியும் .அதனை அவ்வபோது ஆய்வு செய்து செயல்படுத்த மத்திய நீர்வள ஆணையத்தின் நேரடிப் பார்வையில் இருக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்திட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பினை மத்தியில் மோடி அவர்கள் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அதனை முழுமையாக செயல்படுத்தினார்.
அதன்படி 142 அடி கொள்ளளவு பலமுறை உயர்த்தப்பட்டு பாசனம் பெற்றதோடு, அணையின் உறுதித்தன்மையும் மத்தியகுழுக்களால் உறுதி செய்தது.பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி கொள்ளளவை உயர்த்தவும் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் கேரள அரசு உள்நோக்கத்தோடு முல்லை பெரியாறு அணையை உடைப்போம் என்று பகிரங்கமாகவே பல முறை அறிவித்தது.
தமிழக விவசாயிகளின் தீவிர தொடர் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நீர் சேமிப்பு பகுதிகளில் நட்சத்திர ஓட்டல்கள் கட்டுவது, கார் பார்க்கிங் அமைத்து ஆக்கிரமித்தும் வருகிறது.
பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை திட்டமிட்டு தடுத்து வருவதோடு, மின் இணைப்பு கொடுக்கவும் மறுத்து வருகிறது. பொறியாளர்கள் சென்று வர வழங்கப்பட்ட படகு இயக்குவதற்கான அனுமதியை வழங்காமல் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப்பொருட்கள் கொண்டு செல்ல சாலை வசதியை அனுமதிக்க மறுக்கிறது. தமிழக பொறியாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பேபி அணை பலப்படுத்தும் பணி முற்றிலும் தடைபட்டுள்ளது.
இந்நிலையில் வண்டிப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டிமுல்லைப் பெரியாறு அணையை அகற்றுவதற்க்கான கேரள அரசின் மறைமுக நடவடிக்கைக்கு வரைவுத்திட்ட அறிக்கை தயார் செய்ய ஆய்வுக்கான அனுமதியை மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக வழங்கியுள்ளது.தமிழக நலனுக்கு எதிராக மோடி அரசின் நடவடிக்கை தொடர்வது வேதனையளிக்கிறது. கடந்த டிசம்பர் 11ம் தேதி கேரள சட்டமன்றத்தில் பேபி அணையை உடைக்க வேண்டுமென வலியுறுத்தியதையடுத்து பதிலளிக்கும் போதுஉடன் புதிய அணை கட்டுமானப் பணிகள் துவங்கி உள்ளதாகவும் முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது.
இந்நிலையில் தமிழக அரசின் சட்டபூர்வ நடவடிக்கையையும் வரவேற்கிறோம். மத்திய அரசின் அனுமதிக்கு தடை பெறுவதற்கான நடைமுறை தொடர்வதோடு பேபி அணையை பலபடுத்துவதற்க்கான பணிகளை துரிதப்படுத்திட வேண்டும். வரும் பாசனக் காலத்திற்குள் 152 அடி கொள்ளாவை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் துணிவோடு மேற்க்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
அனைத்து கட்சி விவசாயிகள் கூட்டம் கூட்டிடுக…
காவிரி, முல்லை பெரியாறு அணை பிரச்சினைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் சட்டப் போராட்டத்தில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு வலு சேர்க்கும் விதத்தில். அனைத்துக் கட்சிகளும் ஒத்தக் கருத்தோடு செயல்படுவதற்கு முன் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் காவிரி, முல்லைப் பெரியாறு, பிரச்னைகளில் மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கையால் சுமார் 35 லட்சம் ஏக்கர் விளை நிலங்களும், 7 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும் பேராபத்து குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி, விவசாயிகள் சங்க தலைவர்கள் கூட்டத்தை உடன் ,கூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
தமிழகத்தை அழிக்க துடிக்கும் கர்நாடக, கேரள, முதலமைச்சர்களின் நடவடிக்கைக்கு எதிராக அவர்களின் தமிழக வருகையின் போது கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
தயவு தாட்சண்யமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தந்து போராட முன்வர வேண்டும் என அறைகூவல் விடுகிறோம்.
8 வழிச்சாலை திட்டம் கைவிடுக..
சென்னை – சேலம் 8 வழிச்சாலை அமைக்க தனது நிலத்தை தர மறுத்து விவசாயிகள் போராடி வந்தனர். அதனை ஏற்று சாலை அமைக்கும் பனியை கைவிட மறுத்த தமிழக அரசு காவல்துறையை கொண்டு ஒடுக்க முயற்சி மேற்கொண்டது. இதனை எதிர்த்து விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தடையை மீறி அரசு அதிகாரிகள் மிரட்டி நிலம் கையகப்படுத்த முயற்சிப்பதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே திட்டத்தை நிறைவேற்றியே தீர்வோம் என பேசுவதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என்பதை எச்சரிக்கிறோம். தமிழக அரசு உடன் கை விட வவியுறுத்துகிறோம்.
கொங்கு மண்டலத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதை கைவிடுக..
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே நியாயமான கோரிக்கை குறித்து விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடந்திட முன்வர வேண்டும். விளை நிலங்களில் கொண்டு செல்வதை கைவிட்டு சாலை வழியில் பூமிக்கடியில் கொண்டு செல்ல திட்டமிட வேண்டுகிறோம், என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.