The delay in release of 7 persons is a violation of human rights: denunciation of Pazha.Nedumaran
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை
தர்மபுரி பேருந்து எரிப்பில் மூன்று மாணவிகள் உயிரிழப்பிற்குக் காரணம் ஆகி ஆயுள் தண்டனை பெற்ற மூவரை விடுதலை செய்ததற்கான காரணங்கள் குறித்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலைக்கு இதைவிட நியாயமான காரணங்கள் உள்ளன. இந்தக் கொலை வழக்குப் பொடாச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், பொடாச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் இவர்கள் தண்டிக்கப்பட்டனர்.
மேலும், இராஜீவ்காந்தி கொலைத் திட்டம் குறித்து இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தில் சில பகுதிகளை தான் பதிவு செய்யவில்லை என்பதை புலனாய்வு அதிகாரியே தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த 7 பேரையும் விடுதலை செய்யவேண்டுமென தமிழக அரசு பரிந்துரை செய்து, ஆளுநருக்கு அனுப்பிய விண்ணப்பங்களை விரைவில் பரிசீலனை செய்து அவர்களை விடுவிக்க வேண்டியது ஆளுநரின் கடமையாகும். காலம் தாழ்த்துவது சட்டத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரானதாகும், என அதில் தெரிவித்துள்ளார்.