The driver asked for a loan for education fee of Rs. 5,000 bribe: Co-operative Society Secretary, conductor arrested
நாமக்கல்: மகன் கல்வி கட்டணத்திற்காக கடன் கேட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நடத்துடனரான அண்ணா தொழிற்சங்க செயலாளரையும் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம் எஸ்பிபி காலனியைச் சேர்ந்தவர் அரசுப் பேருந்து ஓட்டுநர் நனிகவுண்டன் (46). இவர் கடந்த 2017ம்ஆண்டு டிசம்பர் மாதம் சேலம் சொர்ணபுரியில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் தனது மகன் கல்வி செலவுக்காக ரூ. 3 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.இதற்காக கூட்டுறவு சங்க செயலாளரான வாழப்பாடியைச் சேர்ந்த மனோகரன் (54) என்பவரை பல முறை அணுகியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கடன் வழங்க ஒப்புக் கொண்ட சங்க செயலாளர் மானோகரன், கடன் வழங்க வேண்டுமெனில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க செயலாளரான நாமகிரிப்பேட்டையச் சேர்ந்த வேலுச்சாமி (55) என்பவரை அணுக வேண்டும். அவர் கேட்கும் தொகையை வழங்கினால் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வேலுச்சாமியை, பேருந்து ஓட்டுநர் நனிகவுண்டன் அணுகியுள்ளார். அப்போது ரூ. 5ஆயிரம் தந்தால் உடனடியாக கடன் வழங்கப்படும் என, கூறியுள்ளார்.இதற்கு ஓட்டுநர் நனிகவுண்டன் ஒப்புக் கொண்டபோதிலும் லஞ்சம் தர அவருக்கு மனமில்லை. இதுகுறித்து அவர் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி நேற்று முன்தினம் மாலை திருச்செங்கோடு பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த வேலுச்சாமியிடம்,நனிகவுண்டன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி டி.ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வேலுச்சாமியை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும், வேலுச்சாமி அளித்த தகவலின்படி சிக்கன கூட்டுறவு நாணய சங்க செயலாளரான மனோகரனையும்,போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான வேலுச்சாமி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.