The father sentenced to life imprisonment for killing a child: Perambalur court verdict

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே, பிறந்து 45 நாள்களான குழந்தையை அடித்துக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூர் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நல்லமுத்து மகன் பாலு (எ) பாலமுருகன் (38). விவசாயி. இவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தைத் சேர்ந்த வெண்ணிலாவுக்கும் (32) கடந்த 2013- இல் திருமணம் நடைபெற்றது.

தம்பதியினருக்கிடையே, கடந்த 22.12 2014 ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில், பிறந்து 45 நாள்களான ஆண் குழந்தையை தூக்கிக்கொண்டு வெண்ணிலா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்ல முற்பட்டார். பெரம்பலூர்- சின்னசேலம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற பாலமுருகன் தகராறில் ஈடுபட்டு, ஊருக்கு செல்ல வேண்டாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பாலமுருகன், தனது குழந்தையைப் பிடுங்கி தரையில் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்த புகாரினஅபேரில், கை.களத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) சிவசுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த வழக்கு, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்ட நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், குழந்தையை அடித்து கொலை செய்த பாலமுருகனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட மகளிர் போலீஸார் பாலமுருகனை கொண்டு சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!