The government should call the Jactto-Geo people: Interview with R.Nallakannu

நாமக்கல்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அரசு அழைத்துப் பேச வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்தார்.

முற்போக்கு உழவர் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் முற்போக்கு இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசினார்.  இதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் புஞ்சை நிலங்களை அழித்துவிட்டு எட்டு வழிச் சாலை போடும் பட்சத்தில் கிராமங்களும், விவசாயமும் முற்றிலும் அழிந்து போய்விடும். 8 வழி சாலை திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு இத்திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது தவறு. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.  அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகும். எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கும் அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்களை உதாசீனப்படுவது ஏற்புடையதல்ல.  

கடந்த காலத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவுகள் குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். அவரின் வழியில் வந்த இந்த அரசு அவர்களை உடனடியாக அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.   

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 மாதங்களாகியும் இன்னும் பல இடங்களுக்கு நிவாரணம் சென்று சேரவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை பெற்றுத்தரவும், நெல் கொள்முதல் விலையை உயர்த்தவும் நடவடிக்கையெடுக்க வேண்டும்.  

விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மின் கேபிள்களை பூமிக்கடியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் பயன் உள்ள எந்தவிதமான சாராம்சமும் இல்லை.

கார்ப்பரேட் சந்தையாக தான் வைத்துள்ளார்களே தவிர இங்கு விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் அழிந்து விடுகிறது என்றார்

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!