The Guru who was not my son was gone, the guru … the greatness of my life! Pamaga Ramadoss
file copy
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தி
நான் பெற்றெடுக்காத எனது மூத்த பிள்ளையும், வன்னியர் சங்கத்தின் தலைவருமான மாவீரன் குரு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியை கண்ணீருடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் மாவீரன் குருவின் மறைவு தான்.
எனக்கும், மாவீரன் குருவுக்கும் இடையிலான உறவுக்கு வயது 35 ஆண்டுகளுக்கும் அதிகமாகும். சமூக நீதிப் போராட்டத்தில் எனக்கு துணை நின்ற தளபதிகளில் முக்கியமானவர் மாவீரன் குரு. அவரிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் அதை செய்து விட்டு தான் அடுத்த பணிக்கு செய்வார். எனக்கு அறிமுகமான நாளில் இருந்து கடைசி மூச்சு விடும் நாள் வரை எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர் மாவீரன் குரு. அதேபோல் மாவீரன் குரு மீது நான் கொண்டிருந்த அன்பும், அக்கறையும் ஒருநாளும் குறைந்ததில்லை. குருவுக்கும், எனக்கும் இடையிலான உறவு அரசியல் கட்சி நிறுவனருக்கும், தொண்டருக்கும் இடையிலானதாக ஒருபோதும் இருந்ததில்லை; மாறாக பாசமுள்ள தந்தைக்கும் விசுவாசமுள்ள மகனுக்கும் இடையிலான உன்னதமான உறவாகவே இருந்தது.
மாவீரன் குருவின் செயல்பாடுகள் குறித்து எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அரியலூர் மாவட்டத்தில் இரட்டைக்குவளை முறையை ஒழித்ததில் தொடங்கி என்னை அழைத்துச் சென்று ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை திறக்க வைத்தது, அப்பகுதி மக்களுக்கு எந்த சிக்கல் ஏற்பட்டாலும் உடனடியாக களமிறங்கி போராடுவது என பல்வேறு சாதனைகளுக்கு மாவீரன் குரு சொந்தக்காரர் ஆவார். அவரது பெருமைகளை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. அதற்கான தெம்பும், மனநிலையும் எனக்கு இல்லை. நான் கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறேன்.
மாவீரன் குருவுக்கு கடந்த 4 ஆண்டுகளாகவே நுரையீரல் பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. கடந்த 6 மாதங்களாக அவர் ‘நுரையீரல் காற்றுப்பை திசுக்கள் பாதிப்பு நோயால்’ (Interstitial Lung Disease)பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 46 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கூட அவை உடனடியாக சரி செய்யப்பட்டன. மாவீரன் குருவுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிப்பதற்காக நானும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் தொடர்பான ஆலோசனைகளை பெற்று, அதன் அடிப்படையில் மாவீரன் குருவுக்கு தொடர்ந்து தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.
மாவீரன் குருவுக்கு தொடர்ந்து மருத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் தீவிர மருத்துவம் அளித்து மாவீரன் குருவைக் காப்பாற்றினார்கள். ஆனால், அடுத்த சில நாட்களில் இன்று இரவு 7.45 மணி அளவில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர மருத்துவம் அளித்தனர். ஆனாலும் பயனின்றி இன்று இரவு 8.25 மணிக்கு மாவீரன் குரு காலமானார். எனது வாழ்வில் இன்று வரை சந்திக்காத, தாங்க முடியாத மிகப்பெரிய துயரத்தை நான் இப்போது சந்தித்திருக்கிறேன்.
மிகப்பெரிய அதிர்ச்சி, வேதனை, துயரம் ஆகியவற்றால் தாக்கப்பட்டு, என்னை நானே தேற்றிக் கொள்ளவும் சமாதானப்படுத்திக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் போது மற்றவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்பது தெரியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறேன்