The Jactto -Geo in Namakkal is a road blockade struggle; 462 people arrested
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ஜேக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 462 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் பார்க் ரோட்டில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கூட்டு இயக்கத்தின் (ஜேக்டோ-ஜியோ) சார்பில் நேற்று திரளான ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பா.கிருஷ்ணன் வரவேற்றார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ராமு, செல்வராஜ், மாவட்ட செயலாளர் முருகசெல்வராஜன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சமிழ்மணி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.
இதில் ஆட்குறைப்பு என்ற நிலையில், மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 3500 தொடக்கப் பள்ளிகளை இணைத்து அதன் மூலம் 3500 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 3500 சத்துணவு அமைப்பாளர்கள், 3500 சமையலர்கள் மற்றும் 3500 உதவியாளர்களை பணியிட குறைப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜீ வகுப்புகளை ஆரம்பித்து அதில் தொடக்க கல்வியில் பணிபுரியும் 2381 இடைநிலை ஆசிரியர்களை சமூகநலத்துறைக்கு தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும். பங்களிப்பு ஓய்வுதியத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய முறையினை நடை முறை படுத்திட வேண்டும். 7வது சம்பள கமிஷன் பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளை களையும் நோக்கில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்குஇணையான சம்பளத்தை தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்குவழங்கிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பின்னர் நாமக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகே ஜேக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபுட்ட பெண்கள் 288 பேர்உள்ளிட்ட 462 பேர் கைது செய்யப்பட்டனர்.