The last place for Tamil Nadu in the results of the NEET: the defeat of the Pinnami government! PMK. Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய சராசரி தேர்ச்சி விகிதத்தை விட மிகக்குறைந்த தேர்ச்சி விகிதத்தையே தமிழகம் பெற்றிருக்கிறது. நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார் படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதையும், நீட் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தோற்க வேண்டும் என்பதில் மத்திய அரசு வென்றிருப்பதையும் இது காட்டுகிறது.

தேசிய அளவில் நீட் தேர்வுகளில் பங்கேற்ற 12.70 லட்சம் மாணவ, மாணவியரில் 7.14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 56.27% தேர்ச்சியாகும். அதேநேரத்தில் தமிழகத்திலிருந்து இத்தேர்வுகளில் பங்கேற்ற ஒரு லட்சத்து 14,602 மாணவர்களில் வெறும் 45,336 பேர் மட்டுமே, அதாவது 39.55% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களில் தமிழகம் தான் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. நாகலாந்து மாநிலம் மட்டும் தான் தமிழகத்திற்கு கீழ் கடைசி இடத்தில் இருக்கிறது. 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைக் கொண்ட பட்டியலில் தமிழ்நாடு 34&ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது கடைசியிலிருந்து 3&ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் கல்வித்துறையை சீரழித்திருக்கின்றன. சிந்திக்கும் திறன் கொண்ட கல்வி முறையை ஒழித்து விட்டு, மனப்பாட கல்வியை ஊக்குவித்து கல்வித் தரத்தை குழிதோண்டி புதைத்தது தான் இதற்கு காரணமாகும்.

கல்வியில் சிறந்த மாநிலம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் தமிழகம் நீட் தேர்வில் கடைசி இடத்தை பிடித்திருப்பது தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும். கடந்த 2017-ஆம் ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் பெரும்பான்மையான மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகவில்லை. கடைசி நேரத்தில் நீட் தேர்வை கட்டாயம் எழுதியாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்ட நிலையில், எந்த விதமான முன்தயாரிப்பும் இல்லாமல் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 38.83% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். ஆனால், இம்முறை நீட் தேர்வு உறுதி என்ற எண்ணம் ஏற்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராகி வந்தனர். ஆனாலும், 39.55 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் பின்னடைவு ஆகும். இதற்கு பினாமி அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

மாணவர்களின் தோல்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டுமா? என்ற வினா எழலாம். அதற்கு காரணம் உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வுகளில் 31,243 பேர் கூடுதலாக பங்கேற்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். இவர்களால் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சிறப்புப் பயிற்சி பெற முடியாத நிலையில், தமிழக அரசு வழங்கிய இலவசப் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறலாம் என்று நம்பினார்கள். ஒட்டுமொத்தமாக அரசு பள்ளி மாணவர்கள் 72 ஆயிரம் பேருக்கு 412 மையங்களில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், அரசு பள்ளிகளில் இருந்து தமிழ் மொழியில் தேர்வு எழுதிய 24,720 மாணவ, மாணவியரில் வெறும் 1.86 விழுக்காட்டினர், அதாவது 460 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஒரு மிகவும் மோசமான சாதனையாகும். இதற்கு முழு காரணம் தமிழக அரசு தான்.

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்காக 412 மையங்கள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தாலும் அவற்றில் 312 மையங்கள் தேர்வுக்கு சில வாரங்கள் முன்பாக மட்டுமே தொடங்கப்பட்டன. அவற்றில் மாணவர்களுக்கு 3 நாட்கள் கூட பயிற்சி அளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அரசு மையங்களில் மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சியளிக்கப்படவில்லை. மாறாக, ஆன்லைனில் தான் பயிற்சி அளிக்கப் பட்டது. இதனால் நீட் தேர்வுக்கான எந்த பயிற்சியும், விழிப்புணர்வும் இல்லாமல் தான் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வை எதிர்கொண்டனர். அதனால் தான் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைந்தது.

தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைந்ததில் மத்திய அரசின் பங்களிப்பை புறந்தள்ளிவிட முடியாது. தமிழகத்தில் போதிய எண்ணிக்கையில் தேர்வு மையங்களை அமைக்காமல் துரோகம் செய்தது, கேரளம், இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்து ஆயிரக்கணக்கான மாணவர்களை அலைக்கழித்தது, 49 வினாக்களை எழுத்துப்பிழையுடன் வழங்கியது, தமிழ் மொழி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாளை வழங்கி பதற்றப்படுத்தியது என தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டே ஏராளமான நெருக்கடிகளைக் கொடுத்தது. இவையும் பாதிப்பை ஏற்படுத்தின.

நீட் தேர்ச்சி விகிதத்தைப் பார்த்தால் ஒரு உண்மை எளிதாக விளங்கும். நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிகம் உள்ள இராஜஸ்தான், தில்லி ( தலா74%) ஹரியானா, ஆந்திரம் (தலா 73%) சண்டிகர் (72%), தெலுங்கானா (69%) உள்ளிட்ட மாநிலங்கள் அதிக தேர்ச்சி விகிதங்களைப் பெற்றுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை தரமான பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படவில்லை. தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இதுதவிர தமிழகத்தின் பின்னடைவுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வு என்பதே பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெருநிறுவனங்கள் பணம் பறிப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். எனவே, சட்டப்போராட்டத்தின் மூலம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தான் நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். அதுவரை அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமையான ஆசிரியர்களைக் கொண்டு, தரமான பயிற்சி வழங்குவதன் மூலம் நீட் தேர்வில் தமிழகம் முதலிடம் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!