The milk agents association requested to take drastic action against fake journalists

தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள கோரிக்கை:

“ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யுங்கள்….!!!”
தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எங்கும் போலி.. எதிலும் போலி… என 21ம் நூற்றாண்டில் போலிகள் நிறைந்த உலகமாக மாறியிருக்கிறது நமது வாழ்க்கை.

எது உண்மை..?, யார் உண்மையானவர்கள்…? என்கிற சந்தேகப் பார்வையோடு வாழ்க்கை பயணத்தை கடக்க வேண்டிய சூழலுக்கு நாமெல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறோம்.

அந்த வகையில் உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களிலும் செய்தியாளர்கள் எனும் போர்வையில் தற்போது போலிகள் நிரம்பி வழிவது அதிர்ச்சியளிக்கிறது.

“PRESS” என்கிற அடையாள அட்டை வைத்திருப்பவர்களைக் கண்டால் மரியாதை கொடுத்த காலம் போய் தற்போது அந்த அடையாள அட்டையை பார்த்தாலே “கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள்” வந்து விட்டதாக எண்ணி பொதுமக்கள் பயந்து ஒதுங்கும் சூழல் தான் உருவாகியுள்ளது.

காரணம் புற்றீசல் போல உருவாகியிருக்கும் “லெட்டர் பேடு பத்திரிகையாளர் சங்கங்கள்” தான் என்றால் அது மிகையல்ல. தங்களின் சங்கத்தில் உறுப்பினர்களை சேர்க்கிறோம் என “உறுப்பினர் கட்டணம்” என்கிற பெயரில் குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு “PRESS” என அச்சிட்டு “அடையாள அட்டை”யை வழங்கிடுகின்றன.

மேலும் “ஆண்டு விழா”, “விருது வழங்கும் விழா” எனும் பெயர்களில் “லெட்டர் பேடு பத்திரிகையாளர் சங்கங்கள்” விழாக்கள் நடத்த தொழிலதிபர்களிடமும், தொழில் நிறுவனங்களிடமும் வசூல் வேட்டை நடத்துவதற்கு ஏற்கனவே “PRESS” என அச்சிட்டு “அடையாள அட்டை”யை வழங்கப்பட்டவர்களை பயன்படுத்திக் கொள்கின்றன. இதன் மூலம் ருசி கண்டவர்கள் செய்தியாளர்கள் எனும் போர்வையில் தனித் தனி குழுக்களாக தனியே வசூல் வேட்டையில் இறங்கி விடுகின்றனர்.

மேற்கண்ட லெட்டர் பேடு பத்திரிகையாளர் சங்கங்களில் உறுப்பினராக பதிவு செய்து “PRESS” எனும் “அடையாள அட்டை”யை பெற்றவர்கள் எப்போதோ பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகளின் பெயரிலோ, சமூக வலைதள ஊடகங்கள் பெயரிலோ அல்லது ஏதேனும் ஒரு பகுதியில் வெளியாகும் பத்திரிகைகளின் பெயரிலோ “செய்தியாளர்” என்கிற அடையாளத்தை குறிக்கும் வகையில் தங்களின் வாகனங்களில் “PRESS” எனும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு காவல்துறைக்கே தண்ணி காட்டி வருகின்றனர்.

மேற்படி லெட்டர் பேடு பத்திரிகையாளர் சங்கங்களால் பொதுமக்களும், தொழிலதிபர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பல நேரங்களில் காவல்துறையினரே நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.

எனவே மத்திய, மாநில அரசுகள் இவ்விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு இனியும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மேலும் லெட்டர் பேடு பத்திரிகையாளர் சங்கங்களின் பதிவை உடனடியாக ரத்து செய்வதோடு, “PRESS” எனும் அடையாள அட்டையோடு உலா வரும் போலிகளை அடையாளம் காண அரசு சார்பில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை மட்டுமே செல்லுபடியாகும் என உத்தரவிடுவதோடு அதனை கடுமையாக பின்பற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறைக்கு ஆணையிட வேண்டும்.

அத்துடன் பத்திரிகையாளர் சங்கங்களை தீவிரமாக கண்காணிப்பதோடு, அச்சு, காட்சி, இணையதள ஊடகங்கள் மற்றும் சிற்றிதழ்களை வரன்முறைபடுத்த வேண்டும். மேலும் ஊடகங்களில் பணியாற்றும் தாலுகா, மாவட்ட, நகர செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு ஊடக நிறுவனங்கள் வழங்கும் ஊதியம் குறித்து தீவிரமாக கண்காணிப்பதோடு அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!