The National Highway Transportation Officials at Siruvachoor set top flyover review
சிறுவாச்சூரில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மத்தியசாலை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் 4வழி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து மத்தியசாலை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. ஆன்மீக தலமான இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் சிறுவாச்சூரில் திருச்சி-சென்னை நான்கு வழிச் சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படாததால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டுஅடிக்கடி உயிர்கள் பலியாவது அதிகரித்து வருகிறது.
இதனிடையே, பெரம்பலூர் நடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. மருதராஜா, மத்திய தரைவழிப் போக்குவரத்து மந்திரி மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடம் சிறுவாச்சூரில் நடக்கும் விபத்துக்களில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் பலியாவதை தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கு வசதியாக உயர் மட்ட மேம்பாலம் அமைத்துதருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனை ஏற்று மத்திய சாலை போக்குவரத்து உயர் அதிகாரிகளான திட்ட இயக்குனர் பிரசாதரெட்டி தலைமையில் திருச்சி சுங்கசாலை பொறுப்பாளர் செந்தில்குமரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் ஆகியோர் நேற்று சிறுவாச்சூர் வந்தனர். இருவழி உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு களஆய்வு செய்து எம்.பி.யுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியின்போது பெரம்பலூர் எம்.பி. மருதராஜா, பெரம்பலூர் ஒன்றியக் குழு தலைவர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவகாமி (சிறுவாச்சூர்), செல்வகுமார் (கவுல்பாளையம்), முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துசாமி, துணைத் தலைவர் ரெங்கநாதன், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, அ.தி.மு.க.பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.