The new education district headed by Rasipuram: Teachers Association request
ராசிபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கழக மாநிலக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க மாநிலத்தலைவர் சீனிவாசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாநில அமைப்புச்செயலர் உதயக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடமும், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடமும் ஒத்த பணியிடமாக உள்ளதால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிப்பதிவேடு, பராமரிப்பு, ஓய்வூதிய பலன்கள், வருங்கால வைப்பு நிதி மற்றும் விடுப்பு அதிகாரம் போன்ற அனைத்துப் பணிகளும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலர்களாக நியமிக்க வேண்டும். காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பணி மூப்பு பட்டியல் படி உடனடியாக நிரப்ப வேண்டும்.
500 பள்ளிகளுக்கு ஒரு கல்வி மாவட்டம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 1,650 பள்ளிகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் 2 கல்வி மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. இங்கு ராசிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளின் முதல்வர்களுக்கு இணையான சம்பளத்தை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் அரசு தேர்வு பணிக்களுக்கான உழைப்பு ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.750 வழங்க வேண்டும். மாணவர்களின் கற்றல் சுமையைக் குறைக்கவும், படிக்கும் பாடங்களில் ஆழ்ந்த புலமை பெறவும், 1978-க்கு முன்பு புதுமுக வகுப்புகளில் நடைமுறையில் இருந்தவாறு மொழி மற்றும் ஆங்கில பாடங்களுடன் மூன்று பாடங்கள் மட்டும் மூன்றாம் தொகுதியில் கற்பிக்க வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள 4 பாடங்கள் கற்பிக்கும் முறையை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் கணேசன், பிரச்சார செயலர் பிரேம்குமார் மற்றும் திரளான நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்