The new Hydro Power Project minister laid the foundation stone for the Rs 338.79 crore project at Kollimalai

நாமக்கல் கொல்லிமலையில் ரூ.338.79 கோடி மதிப்பீட்டில் புதிய நீர் மின் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள சின்ன கோவிலூரில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில்,ரூ.338.79 கோடி மதிப்பீட்டில் கொல்லிமலை நீர் மின் திட்டம் ( 20 மெகாவாட்) அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, எரிசக்தி துறை அரசு முதன்மைச் செயலர் முகமது நசிமுதின் தலைமை வகித்தார் . நாமக்கல் எம்.பி. சுந்தரம், சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வரவேற்றார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி விழாவில் கலந்துகொண்டு நீர் மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசியதாவது:

கொல்லிமலையில் உள்ள அரப்பளீஸ்வரர் கோயில் அருகில் ஐந்து இடங்களில் இருந்து பிரிந்து வரும் அய்யாறு என்ற நீரூற்று ஒரு இடத்தில் ஒன்றிணைந்து அருவியாக கீழே விழுகிறது. தண்ணீர் பிரிந்து வரும் ஐந்து இடங்களில், தலா ஒரு அணை கட்டி தண்ணீரை தேக்க தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்தது. அந்த தண்ணீரை3.50 கி.மீ. தூரத்திற்கு சுரங்க வழித்தடம் அமைத்து, நீர் அழுத்த குழாய் மூலம் மலையின் கீழ் பகுதியிலுள்ள புளியஞ்சோலை என்ற இடத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நீரை பயன்படுத்தி புளியஞ்சோலையில், ரூ. 330 கோடியில் 20 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட நீர்மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. கொல்லிமலையில் உற்பத்தியாகும் சிறிய ஆறு,ஓடைகளில் வரும் நீரை தேக்கி, 3 ஆயிரத்து 725 மீட்டர் நீளத்தில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நீரின் மூலம் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலையில் மின்நிலையம் அமைத்து, 20மெகாவாட் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு, 1997ல் திட்டமிட்டது. தடுப்பணை கட்டப்படவுள்ள அசக்காட்டுப்பட்டி கிராமம், அறப்பளீஸ்வரர் கோவில், ஈராங்குழிப்பட்டி, சோழபுரம்பட்டி, குண்டூர்நாடுபாறை ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து, அணை கட்டுவதற்கான நிலங்களை தேர்வு செய்து,கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த புதிய நீர் மின் திட்டம் வரும் 2021 ம் ஆண்டிற்க்குள் நிறைவடையும் என பேசினார்.

விழாவில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் டாக்டர் சரோஜா அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம்கபூர் திட்டம் குறித்து விளக்கிப் பேசினார். விழாவில் பல்வேறு அரசுத் துறை சார்பில் ரூ. ஒரு கோடியே 99 லட்சத்து 5ஆயிரத்து 576 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் சந்திரசேகர் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!