The panchayat president who operates a pump set on a mobile phone to distribute drinking water to the people near Perambalur: public praise!
பா.ஜ.,வைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் கலைச்செல்வன் (45), மொபைல் போன் வாயிலாகவே, ‘பம்ப் செட்’ மோட்டாரை இயக்கி, மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்து அசத்தி வருகிறார்.
பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (45). ஊராட்சித் தலைவரான இவர், பா.ஜ., மாவட்ட துணைத் தலைவராகவும் உள்ளார். அண்மையில், பழுதான தெரு விளக்கை, இவரே மின் கம்பத்தில் ஏறி சரி செய்தார்.
தற்போது கோடை என்பதால், தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையிலும், தண்ணீர் வீணாவதை தடுக்கும் நோக்கிலும், முறையாக தண்ணீர் வினியோகம் செய்யவும் புது யுக்தியை கையாண்டு வருகிறார். இதன்படி, மொபைல் போனில் இயக்கும், ‘ஸ்மார்ட் கன்ட்ரோலர்’ தொழில் நுட்பத்துடன் கூடிய, ‘ஸ்கை’ என்ற, தனித்தனி சிம் கார்டுகள் பொருத்தப்பட்ட, ஐந்து பம்பு செட் மின் மோட்டார்களை, தலா, 32 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கினார்.
அவற்றை இங்குள்ள ஐந்து திறந்த வெளி கிணற்றில் பொருத்தி, இவரது மொபைல் போன் எண்ணில் இருந்து மோட்டார்களின் சிம் எண்ணுக்கு இவர் இருக்கும் இடத்திலிருந்தே அழைத்து, மோட்டார்களை ‘ஆன்’ செய்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் நிரப்புகிறார். ‘தொட்டி நிறைந்தது’ என, இவருக்கு தகவல் வந்ததும், இருக்கும் இடத்திலிருந்தே மோட்டார் இயக்கத்தை நிறுத்தி விடுகிறார்.
இதன் பின், தண்ணீர் திறந்துவிடும் பஞ்., ஊழியர் மூலம், மக்களுக்கு, குழாய் வழியாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், பணம், ஊழியர், நேரம், மின்சாரம் ஆகியவை மிச்சமாகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக செயல்படுத்தப்பட்டு வரும் இவரது முயற்சியை, அனைத்து பஞ்சாயத்திலும் பின்பற்றினால், தண்ணீர் வீணாவதை தடுக்கலாம் என தெரிவித்தார். மேலும், அக்கிராம பொதுமக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.