The person was arrested who damaged the statue of Periyar : Perambalur Police DSP information!


பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் கடந்த 1996ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர்கள் மற்றும் தலைவர்களான பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளையும், அதனைத்தொடர்ந்து கடந்த 2017ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைகளையும் பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட நான்கு சிலைகளில், பெரியார் சிலையின் மீது சிகப்பு நிற சால்வையை அணிவித்திருந்ததோடு, இடது கை பெருவிரல் சேதப்படுத்தபட்டு பீடத்தில் கிடப்பது போன்ற புகைப்படங்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இதனையறிந்த அதிமுகவினர் சிலை இருக்கும் பீடத்திற்கு சென்று சிகப்பு சால்வையை அகற்றியதோடு, பெரியார் சிலையின் கை பெருவிரலை ஒட்டி சரி செய்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினர் மாவட்ட செயலாளர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குன்னம் வட்டம், ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் அனுச்சந்திரன்(32), என்பவர் குடிபோதையில் மேற்கண்ட சிலைகள் உள்ள பீடத்தில் படுத்து தூங்கிய நிலையில், பெரியார் சிலையின் கை பெருவிரலை பிடித்து எழுந்த போது கை விரல் எதிர்பாராத விதமாக உடைந்து சேதமடைந்ததும், பெரியாரின் மீது கொண்ட பற்றால் தன்னிடம் இருந்த சிகப்பு நிற சால்வையை அவர் மீது போத்தியதும், தான் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டையை கழட்டி எம்ஜிஆர் சிலைக்கு அணிவித்து, கொடி கம்பத்தில் முக்கால் வாசி உயரம் பறந்த கட்சி கொடியை அவிழ்த்து உயரமாக ஏற்றி கட்டியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அனுச்சந்திரனை U/S 3OF TN PPDL ACT 1984 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அதிமுகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!