The price of a liter of petrol is Rs.17.66; Selling Price Rs 73.28 – Is this fair? PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் விடுத்துள்ளள அறிக்கை :

உலக அளவிலான பொருளாதார மந்தநிலை காரணமாகவும், எண்ணெய் உற்பத்தி நாடுகளிடையிலான போட்டி காரணமாகவும் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்து வருகிறது. ஆனால், உள்நாட்டு சந்தையில் அதற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் இந்த கொள்ளை லாபப்போக்கு கண்டிக்கத்தக்கது.

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வந்த சூழலில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்றுமதி குறைந்ததால் அனைத்து நாடுகளிலும் உற்பத்தி பெருமளவில் குறைந்திருக்கிறது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை குறைந்துள்ள நிலையில், சவுதி அரேபியா உற்பத்தியை அதிகரித்திருப்பதால் போட்டி காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால், அதன் பயன்களை நுகர்வோருக்கு வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுக்கின்றன.

கச்சா எண்ணெயின் விலை உலக சந்தையில் கடந்த ஜனவரி ஒன்றாம் நிலவரப்படி பீப்பாய் 61.13 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல், டீசலின் விலை முறையே ரூ.78.12, ரூ.71.86 ஆக இருந்தன. மார்ச் 10&ஆம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 30.20 டாலராக குறைந்து விட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை ரூ.73.28, ரூ.65.59 என்ற அளவில் தான் குறைந்துள்ளது. இது உண்மையாக குறைக்கப்பட வேண்டிய விலையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பதை மிகவும் எளிதாக நிரூபிக்க முடியும். ஜனவரி ஒன்றாம் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 61.13 டாலர் எனும் நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.35.65 ஆகும். இதில் சுத்திகரிப்பு மற்றும் வாகன வாடகை செலவுகளும் அடக்கம் ஆகும். அதன் மீது கலால் வரி ரூ.19.98, விற்பனையாளர் கமிஷன் ரூ.3.52 ஆகியவற்றுடன் தமிழக அரசின் 32.11% விற்பனை வரியாக ரூ.18.98 சேர்த்து தான் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.12க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய சூழலில் கச்சா எண்ணெய் விலை 30.20 டாலர் தான் என்பதால், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 17.66 மட்டும் தான். அத்துடன் அதன் மீது கலால் வரி ரூ.19.98, விற்பனையாளர் கமிஷன் ரூ.3.52 ஆகியவற்றுடன் தமிழக அரசின் 32.11% விற்பனை வரியாக ரூ.13.21 சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.54.37&க்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், ரூ.18.91 கூடுதலாக விற்கப்படுகிறது. இது மிகவும் அநியாயமாகும்.

அதேபோல், இன்றைய நிலையில் ஒரு லிட்டர் டீசலின் உற்பத்திச் செலவு ரூ.19.10 மட்டுமே. அதனுடன் மத்திய கலால் வரி ரூ.15.83, விற்பனையாளர் கமிஷன் ரூ.2.47 மற்றும் மாநில அரசின் 24.04 விழுக்காடு விற்பனை வரி ரூ.8.99 சேர்த்தால் ஒரு லிட்டர் டீசல் ரூ.46.39க்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், அதைவிட ரூ.21.20 கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இயல்பாக விற்கப்பட வேண்டிய விலையை விட 50% அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்யப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.

ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.17.66 மட்டுமே. ஆனால், அதைவிட 4 மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அடக்கவிலையை விட அதிகமாக மத்திய அரசும், மாநில அரசும் வரி வசூல் செய்கின்றன. அதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலை குறைவை கணக்கில் காட்டாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.32 என எண்ணெய் நிறுவனங்கள் கணக்கு காட்டுகின்றன. இந்த வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.15 மறைமுக லாபம் கிடைக்கிறது. இந்த மறைமுக லாபத்தின் பெரும் பகுதியை அரசின் கணக்கில் சேர்க்கும் வகையில் கலால் வரியை கணிசமாக, அதாவது குறைந்தது ரூ.10 வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இப்போதே ஒரு லிட்டருக்கு ரூ.19.98, டீசலுக்கு ரூ.15.83 வீதம் மத்திய அரசு கலால் வரி வசூலிக்கிறது. இதில் பெட்ரோல் மீதான கலால் வரி 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 13.47 ரூபாயும் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016 ஜனவரி மாதம் வரையிலான 15 மாதங்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்த போது, அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் இருந்ததன் மூலம் உயர்த்தப்பட்டவை ஆகும். இப்போது இன்னும் கூடுதலாக ரூ.10 கலால் வரியை உயர்த்த நினைப்பது ஏற்க முடியாததாகும். பொருளாதார மந்த நிலை காரணமாகவே கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் கிடைக்கும் பயன்கள், பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்படக்கூடிய சாதாரண மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அனைத்தையும் அரசே அனுபவிக்கக்கூடாது.

எனவே, கச்சா எண்ணெயின் விலை சரிவைக் கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு தலா ரூ. 20 வீதம் குறைக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முன்வர வேண்டும். இனி வரும் காலங்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!