தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையரின் உத்தரவின்படி பீஹார் மாநிலத்திலிருந்து மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெ.ராஜேந்திரன் தலைமையிலான ஒரு துணை வட்டாட்சியர், இளநிலை உதவியாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் 21.1.2016 அன்று பீஹார் மாநிலத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துவர சென்றனர். இக்குழுவினர் இன்று காலை பெரம்பலூர் மாவட்டத்தை வந்தடைந்தனர்.
500 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 114 வாக்குப்பதிவு இயந்திரங்களும் இக்குழுவினரால் இன்று கொண்டுவரப்பட்டு பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அனைத்து கருவிகளும் ஒரு அறையில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது.
ஏற்கனவே, குஜராத் மாநிலத்திலிருந்து 727 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் 860 கட்டுப்பாட்டுக்கருவிகள் கடந்த ஜன.27 அன்று வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.