The Tamil Nadu Government Employees Union, including the DA evening dharna demanding
அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார் தலைமையில் மாலை நேர தர்னா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
1.7.2016 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். ஊதியக்குழு அமைக்க வேண்டும். 1.1.2016 ஆம் தேதி முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநிலத் துணை தலைவர் சு. பார்த்தீபன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலர் ஆ. தெய்வராசா, மாவட்டத் துணை தலைவர்கள் பி. தயாளன், சி. இளங்கோவன், மாவட்ட இணைச் செயலர்கள் இரா. தமிழ்மணி, ப. குமரி அனந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் சி. சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் சீ. சுசிகுமார் நன்றி கூறினார்.