The Tamil Nadu Legislative Assembly Government Pledge Committee inspected the projects implemented on behalf of the Tamil Nadu Government in Perambalur!
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதி மொழிக் குழுவினர் இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழிக் குழுவின் தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் தலைமையில், குழுவின் உறுப்பினர்களும், எம்.எல்.ஏக்கள் கே.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), ஆர்.அருள் அ (சேலம் மேற்கு), எம்.பழனியாண்டி (ஸ்ரீரங்கம் ), பி.ராமலிங்கம் (நாமக்கல் ) மற்றும் முதன்மைச் செயலாளர் கி.சீனிவாசன், கலெக்டர் க.கற்பகம், பெரம்பலூர் எம்.எல்.ஏ. ம.பிரபாகரன், இணைச்செயலாளர் மு.கருணாநிதி, துணைச் செயலாளர் ஸ்ரீ.ரா.ரவி ஆகியோர் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு இன்று விரிவாக மேற்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையம் ஊராட்சியில் கோனேரி ஆற்றின் குறுக்கே நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் 84 கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டத்தினை மேம்படுத்தும் வகையிலும், 102 ஆழ்குழாய் கிணறுகள் பயன்பெறும் வகையிலும், 351.00 ஏக்கர் பாசனத்தினை உறுதிபடுத்தும் வகையிலும் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிகுழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் உள்ள வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியினை பார்வையிட்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிகுழுவினர் அங்கு தங்கியிருந்த மாணவர்களிடம் தரமான உணவு வழங்கப்படுகிறதா எனவும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என்பது குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர்.
பின்னர் எறையூர் சர்க்கரை ஆலையில் முடிவுற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழி குழுவினர் ஆலை செயல்பாடு குறித்து பார்வையிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் காலணி உற்பத்தித் தொழிற்சாலையினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிகுழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள பெரம்பலூர் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை அலுவலக கட்டிடத்தினை பார்வையிட்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிகுழுவினர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அலுவலக பணிகளையும் கட்டடத்தின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழி குழுவினர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துமனைக்கு சென்று பார்வையிட்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழி குழுவினர் அங்கு சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து, மருத்துமனை சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் டெங்கு அதிகமாக பரவி வருவதால் அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்தும், அறிவிக்கப்பட்டு குறித்த காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ள திட்டங்கள், தற்போது பணிகள் நடைபெற்று வரும் திட்டங்கள், நிலுவையில் உள்ள பணிகள் என ஒவ்வொரு துறை வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த நிகழ்வுகளில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் மற்றும் பலவேறு அரசு முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!