The teachers requested to stop providing government fees to private schools as per RTE Act


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூர் ஆர்.சி.ஆர் கூட்ட அரங்கில் இன்று, மாநிலத் தலைவர் திரு.கி.மகேந்திரன் அவர்கள் தலைமையிலும், மாநில சிறப்புத் தலைவர் டி. சுப்ரமணியன் முன்னிலையிலும் நடைபெற்றது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

வரும். ஜுன் 9. (சனிக்கிழமை) அன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள ஜேக்டோவின் போராட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 10 அம்சக் கோரிக்கையை ஏற்பளித்து, பெரும் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வெற்றிபெறச்செய்ய வேண்டும்

சீர்திருத்தம் என்ற பெயரில் முதுகலை ஆசிரியர்களுக்கு 9 மற்றும் 10 வகுப்புகளில் பாடவேளைகளை ஒதுக்கி பட்டதாரி ஆசிரியர்கள் உபரி என கணக்கிட்டு பணிநிரவல் செய்யும் முயற்சியை அரசு முழுமையாக கைவிடவேண்டும்.

ஆசிரியர் மாணவர்கள் விகிதத்தை 1:20 என்ற அளவில் நிர்ணயம் செய்து தேவையான கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை அரசு நியமனம் செய்திட வேண்டும்.

9 மற்றும் 10 வகுப்புகளுக்கு கருத்தியல் பாடத்திற்கு 7 பாடவேளை ஒதுக்கியுள்ளது போல அறிவியல் பாடங்களுக்கு செய்முறை பயிற்சிக்கு 7 பாடவேளைகள் ஒதுக்கி மாணவர்களின் திறன் மேம்படுத்த இந்த கல்வியாண்டிலேயே அரசு முடிவெடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

AEEO/BEO பதவிகளுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி 3 சதவீதம் வழங்கப்பட்டு வரும் நடைமுறையை உடனே ரத்து செய்து பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

மாணவர்களின் நலன் கருதி, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிவுக்கு கொண்டுவந்து காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும்.

மாறுதல் கலந்தாய்வில் ஓர் ஆண்டு பணிமுடித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி, காலி பணியிடத்தை விரும்பியவர்கள் (இதர நிபந்தனைகளுடன்) நிரப்பிட அரசு உரிய திருத்தம் செய்து இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அரசு பள்ளிகளை நசுக்கும்வகையிலும் 25 சதவீத மாணவர்களை RTE சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் கட்டாயமாக சேர்க்க வேண்டுமென்றும் அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் கடைபிடிக்கும் நடைமுறையை முற்றிலுமாக கைவிடவேண்டும், என்ற கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!