The two-day medical camp for children in Namakkal district will begin in 28th
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இருவார வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம் நாளை துவங்குகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் தொடர்பாக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்தும் இரு வார விழிப்புணர்வு முகாம் வரும் 28ம் முதல் ஜூன் 9ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 1.3 லட்சம் பேர் வயிற்றுப்போக்கு நோயால் உயிரிழக்கின்றனர். அதில் ஊட்டச் சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளும் 2 வயதிற்கு குறைவான குழந்தைகளும் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
வயிற்றுப்போக்கு நோய் சுலபமாக தடுக்கப்பட கூடியதும், குணப்படுத்தக்கூடியதுமாகும். சுத்தமான குடிநீர், சுற்றுப்புற சுகாதாரம், குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது மற்றும் இரண்டு வயது வரை இணை உணவுடன் தாய்ப்பால் கொடுப்பது, சரியான ஊட்டச்சத்து கொடுப்பது, கைகளை முறையாக சோப்பு கொண்டு கழுவுவது போன்றவற்றின் மூலம் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கலாம் என்பதை அனைத்து தாய்மார்களும் தெரிந்துகொண்டு அவற்றை கடைபிடிக்க வேண்டும்.
நோய்கள் வராமல் தடுக்க கை கழுவுவதன் முக்கியத்துவம் பற்றி தொரிந்துகொள்ள வேண்டும். திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்த்து கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்.
வயிற்றுப்போக்கு கண்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் 14 நாட்களுக்கு வழங்குவதன் மூலம் நீர்ச்சத்து குறைவதை தடுப்பதுடன் உயிரிழப்புகளை சுலபமாக தவிர்க்கலாம்.
இது அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. எனவே குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதோடு உயிரிழப்பும் ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் மற்றும் தாய்மார்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு இருவார முகாம் மாவட்டம் முழுவதும் வரும் 28ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இந்த இரு வார வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் முகாம்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை, சமூக நலம், சத்துணவு திட்டத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறைகளைச் சார்ந்த 2000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அரசு ஆஸ்பத்திரிகள் ஆகிய இடங்களில் போதுமான மருந்து, மாத்திரகைள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
எனவே தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த விழிப்புணர்வு முகாம்களுக்கு வருகை தந்து பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.