The village panchayat tournament will be held on June 1 in Namakkal district

நாமக்கல்லில் வரும் ஜூன் 1ம் தேதி கிராம ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவங்குகின்றது.

கிராம ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளிலும் விளையாட்டினை மேம்படுத்திட கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2016-17ம் ஆண்டு கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் நாமக்கல் மாவட்டத்திலுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜூன் 1 ம் தேதி தொடங்கி 30 ம் தேதி வரை நடத்தப் படவுள்ளன. தடகளப் போட்டிகள் (ஆண்,பெண் இருபாலருக்கும்), 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம், நீளம் தண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கையுந்துப் போட்டி, கபடி, கால்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப் படவுள்ளன.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடத்தைப் பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் வகையில் 2 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும் கிராம ஊராட்சியில் அமைந்துள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளடங்கிய அனைவருக்கும் இப்போட்டிகளில் முழுமையாகப் பங்கேற்க செய்யவும், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி போட்டிகள் நடத்திடவும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்தப் போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.

கிராமத்தில் உள்ள பள்ளி விளையாட்டுத் திடல், சமுதாயக் கூட வளாகம் அல்லது பொதுத் திடலில் போட்டிகளை அந்தந்த கிராமத்தில் வசதிக்கு ஏற்ப நடத்திட வேண்டும். அந்த கிராமத்தைச் சார்ந்த உடற்கல்வித் துறை ஆசிரியர்களின் உதவியுடன் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஒரு கிராமத்தில் குடியிருப்பவர், பங்கேற்பவர் வேறு கிராமத்தில் இதே போட்டிகளில் பங்கேற்கக் கூடாது. கிராம ஊராட்சி அளவிலான போட்டிகள் 3 நாள்கள் நடத்தப்படும் என பேசினார். கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பெரியகருப்பன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீஸ் துறை, வளர்ச்சித் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!