வேப்பந்தட்டை அருகே வேலை கொடுத்த ஹோட்டல் உரிமையாளரின் காரையே திருடிய வாலிபரை ரோந்து போலீசார் கைது செயங்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் . இவர்கள் கிருஷ்ணாபுரத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 24ந்தேதி ஹோட்டலுக்கு சென்ற வாலிபர் ஒருவர் தனக்கு வேலை வேண்டுமென கேட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு சிங்காரம் இரக்கப்பட்டு வேலை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு பெரம்பலூர் அரியலூர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பேரளி என்ற இடத்தில் சாலையோரம் கார் ஒன்று நின்றுள்ளது.
இதனை கண்ட போலீசார் காரின் அருகே சென்று காரில் அமர்ந்திருந்த வாலிபரிடம் ஏன் இங்கு நிற்கின்றீர்கள் என விசாரித்ததில், எரிபொருள் இல்லாமல் காரை நின்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
வாலிபரின் பதிலால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ்(21) என்பதும், கிருஷ்ணாபுரத்தில் ஹோட்டலில் வேலை செய்வது போல் நடித்து, ஹோட்டல் உரிமையாளருக்கு சொந்தமான காரை திருடிக்கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ரோந்து போலீசார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அரும்பாவூர் போலீசார் கார் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து, அவரிடமிருந்து காரை கைப்பற்றி தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.