Thiruvarur has an intent on both election announcement and cancellation: KMDK ER. Eswaran

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை:

திருவாரூர் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பின் கருத்துகளை கேட்டு நிறுத்துவதற்கு பதிலாக முதலிலேயே கருத்துகளை கேட்டு தேர்தலை அறிவிக்காமல் இருந்திருக்கலாம். ஒரு தேர்தல் ஆணையம் இப்படி நடந்து கொள்வது தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையை குறைக்கும்.

மழையையும், புயலையும் காரணம் காட்டிதான் முதலிலே நடத்தப்பட இருந்த தேர்தல் நிறுத்தப்பட்டது. கஜா புயல் அடித்து அதிகமான பாதிப்புகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு முன் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கின்ற ஒரு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை எல்லோரும் ஆச்சரியமாக தான் பார்த்தார்கள்.

வரும் காலத்தில் இனி தேர்தல் ஆணையம் எந்த தேர்தலை அறிவித்தாலும் அது நடக்குமா என்ற சந்தேகத்தை சந்தேகமில்லாமல் எழுப்பும். R.K.நகர் தேர்தலை ஒருமுறை நிறுத்திய போது கூட பணப்பட்டுவாடா அதிகமாகிவிட்டது என்று சொல்லி நிறுத்தினார்கள்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அதை தடுக்க முடியாத தேர்தல் ஆணையம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டது. தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கைகள் என்ன ?. 2014 -ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையமே கடைசி 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவை போட்டு ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு வசதி செய்து கொடுத்தது.

தொடர்ந்து இது போன்ற தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நகைப்புக்குரியதாக மாறியிருக்கிறது. உள்நோக்கத்தோடு அறிவிக்கப்பட்ட திருவாரூர் தேர்தலை கஜா புயல் நிவாரண பணிகளை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் நிறுத்தி இருக்கிறது. ஆனால் இந்த இடைத்தேர்தல் நடத்தி இருந்தால் அந்த தொகுதி மக்களுக்கு எத்தனை மடங்கு நிவாரணம் கிடைத்திருக்கும் என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரியும்.

இதுவரை இடைத்தேர்தல்களை கவனித்தவர்களுக்கும் தெரியும். இதுதான் எதார்த்தம். திடீரென்று தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் வேண்டுமானால் அதிர்ச்சியோடு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் அந்த தொகுதி மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அதிகப்படியாக அரசியல் கட்சிகளால் கவனிக்கப்படுவோம், தேர்தல் நிவாரணம் வழங்கப்படுவோம் என்று ஆசையோடு எதிர்பார்த்து இருந்தார்கள்.

அதை எதிர்பார்த்து இந்த ஒருவார காலத்தில் கடன் வாங்கி செலவு செய்தவர்களும் உண்டு. அவர்கள் எல்லாம் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஜனநாயக முறையில் நடக்க வேண்டிய தேர்தல் எப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இதற்கொரு தீர்வை காணாமல் இந்த நிலை தொடருமென்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!