பெரம்பலூர் மாவட்டத்தில் 5 வது ஆண்டாக 29.01.2016 முதல் 07.02.2016 வரை 10 நாட்கள் புத்தகத்திருவிழா மிகச்சிறப்பாக, கோலாகலமாக நடத்தப்படவுள்ளது இது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர;கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பபாசியின் இணைச் செயலாளர் முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பப்பாசி ஆதரவுடன் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், பெரம்பலூர் மக்கள் சிந்தனைப்பேரவை இணைந்து நடத்தும் பெரம்பலூர் 5 வது புத்தக திருவிழா 2016, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் 29.01.2016 முதல் 07.02.2016 வரை நடைபெற உள்ளது.
சென்ற ஆண்டு நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டது. ரூ.1.63 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனையானது. 1.20 லட்சம் வாசகர்கள் புத்தககத்திருவிழாவினை கண்டுகளித்தனர். சென்ற ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு பொதுமக்களிடையே புத்தகத் திருவிழாவிற்கு அதிக வரவேற்பு உள்ளதால் 2 கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஆண்டு இதில் 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களின் புத்தகங்களை இடம் பெறச் செய்கின்றனர். 120 அரங்குகளில் சுமார; 5 லட்சத்திற்கு மேலான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளன. வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படும். புத்தக திருவிழாவிற்கு வருகைதரும் அனைத்து வாசகர்களுக்கும் டோக்கன் வழங்கங்கப்பட்டு, அன்றைய தினமே (ஒவ்வொரு நாளும்) குலுக்கல் நடத்தப்படும். இதில் மூன்று வாசகர்கள் தேர்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ரூ.500 மதிப்பிலும், இரண்டாம் பரிசாக ரூ.300 மதிப்பிலும், மூன்றாம் பரிசாக ரூ.200 மதிப்பிலும் அவர்கள் விரும்பிய புத்தகங்களை வாங்கி கொள்ளலாம். புத்தகத்திருவிழாவில் கண்தானம், இரத்த தானம் செய்ய முன்வருபவர்கள், தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச இரத்த பரிசோதனை மையங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்ப்படுத்தப்பட உள்ளன.
மேலும் புத்தக திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் பங்குபெறும் வழக்காடு மன்றம் மற்றும் பட்டிமன்றம், சிறப்பு சொற்பொழிவுகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. மேலும், புத்தகத்திருவிழா அரங்கத்தில் பொதுமக்களுக்கான சிறப்பு சுகாதார அரங்குகள் நடத்தப்படும்.
இதில் பொதுமக்கள், கர்பினித் தாய்மார்கள், பெரியவர்கள் தங்களின் உடல்நலம் குறித்து பரிசோதனை செய்து கொள்ளலாம். வளாகத்திலேயே நடமாடும் ஏடிஎம் இயந்திரம் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அன்றாடம் உலகின் தலைசிறந்த குறும்படங்கள் திரையிடப்படும்.
எனவே இந்த புத்தகத்திருவிழாவிற்கு பெரம்பலூர் மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்களைச் சார்ந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு பபாசி இணைச் செயலாளர் முருகன் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றத்தின் தலைவர் விஷால்.சரவணன், செயலாளர் வள்ளலார்.அரவிந்தன், பெரம்பலூர் மக்கள் சிந்தனைப்பேரவை தலைவர் சூப்பர்30.ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.