Though the governments do not fight against the people, the Tamil Nadu will be destroyed: Thirunavukkarar
நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 35 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம். அதை 50 லட்சமாக உயர்த்த இலக்கு உள்ளது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழகத்தில் ராகுல்காந்தி வருகை தந்து கட்சிக்கூட்டங்களில் கலந்துகொள்வார்.
மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் அதிமுக அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல் ஒன்றாக வர வாய்ப்புள்ளது.
பாஜக அரசின் பினாமி ஆட்சியாக தமிழக அரசு உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 13 பேர் சுடப்பட்டு இறந்துபோன பிறகுதான் ஆலையை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டதை மாநில அரசு தடுத்திருக்க வேண்டும்.
முன்கூட்டியே போராட்டக்காரர்களிடம் பேசி இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. அரசின் பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது.
மத்தியில் பாஜக அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் வேலைவாய்ப்பு பெருகவில்லை. வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. வறுமையில் உள்ளவர்கள் மேலும் நலிவடைந்து விட்டனர்.
நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும்(இடைத்தேர்தல் முடிவுகள் உள்பட) பல தேர்தல் முடிவுகள், மோடியின் அலை ஓய்ந்துவிட்டதையும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் செல்வாக்கு அதிகரித்து வருவதையுமே காட்டுகிறது.
கர்நாடக மாநிலத்தில் கொல்லைப்புற ஆட்சி அமைக்க நினைத்த பாஜக ஆட்சி அகற்றப்பட்டுவிட்டது. எதிர்வரும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்திருந்தால் மாநில அரசு, காவல்துறை, உளவுத்துறை ஆகியவற்றின் தோல்வியாகவே கருதப்படும். அங்கு சமூக விரோதிகள் யாரும் இல்லை. எல்லாவற்றுக்கும் போராடினால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் என ரஜினிகாந்த் கூறி் இருக்கிறார்.
அதே நேரத்தில் அரசுகள் மக்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டால் போராடித்தான் ஆக வேண்டும். அவ்வாறு போராடவில்லை என்றாலும் தமிழகம் சுடுகாடாகிவி்டும்.
4 ஆண்டு கால சாதனைகளை பாஜக கொண்டாடும் அதே வேளையில், மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பாதிக்கப்பட்டதை எடுத்துக்கூறும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும்.
காவிரி நீர்ப்பங்கீட்டை பொறுத்தமட்டில் கர்நாடகாவில் இப்போதுதான் புதிய ஆட்சி அமைந்துள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும் நீதிமன்ற உத்தரவுகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.