Thousands of teachers arrested: JACTTO- GEO strike and road protest action
நாமக்கல்: நீதிமன்ற உத்தரவையும் மீறி கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் மாவட்ட அளவிலான ஜேக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 1460 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்றும் மாணவர்களின் நலன் கருதி நேற்று 25ம் தேதிக்குள் பணிக்குத்திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதை மீறி நேற்று நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கூட்டு இயக்கத்தின் (ஜேக்டோ-ஜியோ) சார்பில் இன்று 4வது நாளாக திரளான ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பாகிருஷ்ணன் வரவேற்றார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ராமு, செல்வராஜ், மாவட்ட செயலாளர் முருகசெல்வராஜன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். இடைநிலை ஆசிரியர்களை சமூகநலத்துறைக்கு தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும். பங்களிப்பு ஓய்வுதியத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய முறையினை நடை முறை படுத்திட வேண்டும். 7வது சம்பள கமிஷன் பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளை களையும் நோக்கில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தை தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் நாமக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகே ஜேக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 825 பெண்கள் உட்பட 1460 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் அழைத்துச்சென்றனர்.
இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட இருபால் ஆசிரியர்கள், மற்றும் சங்க பொறுப்பாளர்களை கைது செய்து உள்ளனர்.