இடி, மின்னலின்போது மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கழகத்தின் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் க. அருள்மொழி தெரிவித்திருப்பது: தென்மேற்கு பருவமழை, புயல், வெள்ளக்காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல வேண்டாம். அதுகுறித்து அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும்.
மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், மின்கம்பத் தாங்கு கம்பிகள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம். இடி, மின்னலின்போது திறந்த வெளியில் இருக்க வேண்டாம். அத்தருணத்தில் உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடம், வீடு, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சம் அடையலாம்.
இடி, மின்னலின்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் அடைய வேண்டாம். மேலும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும்.
இடி, மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோகக் கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இடி, மின்னலின்போது தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மேலும் திறந்தவெளியில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம்.