#Tiruvannamalai dheepam: Temple car festival ceremonial start of the five charioteers
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை முதல் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா டிசம்பர் 12-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவின் 7-ம் நாளான இன்று காலை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.
காலை 6.45 மணிக்கு தனுர் லக்கினத்தில் ஸ்ரீவிநாயகர் தேரோட்டம் தொடங்கியது. தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்களில் வலம் வந்த ஸ்ரீவிநாயகர் தேர், காலை 10.45 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்து. 2-வதாக காலை 11 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் தேர் புறப்பட்டது. மாட வீதிகளில் வலம் வந்த முருகர் தேர், பகல் 12.30 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. 3-வதாக பெரிய தேர் எனப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர் பிற்பகல் சுமார் 1 மணிக்குப் புறப்படுகிறது. 4-வதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் ஸ்ரீபராசக்தியம்மன் தேரும், 5-வதாக சிறுவர்கள் மட்டுமே இழுக்கும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேரும் புறப்படுகின்றன.
கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்படும் பஞ்ச ரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மாட வீதிகளை வலம் வருகின்றன. தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வரும் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் இரவு 11.30 மணிக்கு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டத்தைக் காண தேரடி தெரு, திருவூடல் தெரு, பெரிய தெருக்களில் கூடியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையால், தேரோட்டத்தில் அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.