TNEB Awareness Campaign on behalf of Purattasi Festival in Nainamalai Perumal temple near Namakkal
நைனாமலை ஸ்ரீ வரதராஜபெருமாள் புரட்டாசி விழாவில் மின்வாரியத்தின் சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழாவையொட்டி நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பில் கோவில் அருகில் நீர்மோர் பந்தல் அமைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சந்தானம் தலைமை வகித்துப் பேசியதாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மின் விபத்துகளை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது. இடி அல்லது மின்னலின்போது தண்ணீர் தேங்கி உள்ள பகுதியை விட்டு தூரமாக நிற்க வேண்டும்.
மேலும் குடிசை வீட்டிலோ மரத்தின் அடியிலோ, பஸ் ஸ்டாப்புகளிலோ தஞ்சம் புகக்கூடாது. அதற்கு பதிலாக கான்கிரீட் வீடு, உலோகத்தால் மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற இடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தீ விபத்து ஏற்படும்பொழுது வீட்டில் உள்ள மெயின் சுவிட்சை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட 31 விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. என அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் செயற்பொறியாளர் சபாநாயகம். உதவி செயற்பொறியாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட பல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.