Tobacco Advertisement at Chepakkam Cricket Ground: Report to Police!
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை 15-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடைபெறவிருக்கும் நிலையில், இப்போட்டியின் போது புகையிலைப் பொருட்கள் விளம்பரங்களை மேற்கொள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான விளம்பர பலகைகள் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சட்டவிரோத விளம்பரங்களை அகற்ற வேண்டும், இந்த விளம்பரங்களை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அவர்கள் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 6 ஆம் நாள் ஹைதராபாத் நகரிலும் டிசம்பர் 8 ஆம் நாள் திருவனந்தபுரம் நகரிலும் நடைபெற்ற போது ‘பான் பஹார், பாபா, சைனி கைனி, கம்லா பசந்த், ஷிகார்’ ஆகிய புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்பட்டன. தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டன. அதே போன்று ‘பான் பஹார்’ புகையிலைப் பொருள் விளம்பரங்கள் சென்னை போட்டியிலும் வைக்கப்படவுள்ளன. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புகையிலைப் பொருள் விளம்பரங்கள் வைக்கப்படுவதும், தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்தப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். இது இந்திய புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டத்தில் கூறப்பட்டுள்ள படி அவசியமாகும்.
எனவே, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புகையிலை விளம்பரங்கள் வைப்பதை தடுக்க வேண்டும். இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் புகையற்ற புகையிலைப் பொருள் நிறுவனங்கள், இந்திய கிரிக்கெட் வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உள்ளிட்ட அனைவரும் இக்குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் மாநில செயலாளர் இர. அருள் சென்னை காவல்துறை ஆணையர் அவர்கள் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகள் மூலம் புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்படுவது குறித்து, இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலிக்கு முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். மற்றும், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புகையிலை விளம்பரங்கள் வைப்பதை தடுக்க வேண்டும் எனக் கோரி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் டிசம்பர் 13 ஆம் நாள் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.