Training in polling officers at Perambalur for parliamentary elections
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான வே.சாந்தா இன்று (24.03.14) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பயிற்சி வகுப்பில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தேர்தலில் எந்த விதமான பாரபட்சமின்றி அனைத்து அலுவலர்களும் நேர்மையாக, நடுநிலைமையோடு செயல்படவும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும், வாக்குச்சாவடி முதல் நிலை அலுவலர்களுக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இயக்குவது தொடர்பாகவும், மாதிரி வாக்குப்பதிவு நடத்துவது போன்ற அடிப்படையான பணிகளும், விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பொறுப்பு மற்றும் கடமை பற்றியும், தேர்தலின் பொழுது அனைத்து அலுவலர்களும் கடைப்பபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் அழகிரிசாமி, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜெயினுலாப்தீன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன், மகளிர் திட்ட அலுவலர் தேவநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.