Training of quality certified seeds in Namakkal
நாமக்கல் : வேளாண்மைத் துறையின் மூலம் தரமான சான்று பெற்ற விதைகள் ஆண்டு தோறும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
நடப்பாண்டில் அரசு சான்று விதைகள் உற்பத்தி களப்பணி மேற்கொள்ளும், புதியதாக பணியில் சேர்ந்த உதவி விதை அலுவலர்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் தரமான சான்று விதைகள் உற்பத்தி குறித்து புத்தூட்டப் பயிற்சி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறை மூலம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் அசோகன் வரவேற்று நாமக்கல் மாவட்டத்தில் நடைமுறைபடுத்தப்படும் விதைப் பெருக்கத்திட்டம் குறித்துக் கூறினார்.
நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சேகர் நிகழ்ச்சிக்க தலைமை வகித்து, தரமான சான்று விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இப்பயிற்சியில் நாமக்கல் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் ஜெகதீசன் கலந்து கொண்டு உதவி விதை அலுவலர்களுக்கு விதைப்பண்ணைகள் பதிவு செய்தல், விதைப்பண்ணைகள் கள ஆய்வு மேற்கொள்வது, விதை சுத்தி அறிக்கை வழங்குவது, விதை மாதிரீகள் எடுப்பது, விதை ஆய்வறிக்கை வழங்குவது மற்றும் பகுப்பாய்வில் தேறிய விதைக் குவியல்களுக்கு சிப்பமிட்டு சான்றட்டை பொருத்துதல் குறித்து பயிற்சியளித்தார்.
மேலும், இப்பயிற்சியில் விதைச்சான்று நடைமுறை பணிகளை இன்டர்நெட்டில் பதிவுகள் மேற்கொள்வது குறித்து விதைச்சான்று அலுவலர்கள் ஜெயக்குமார், ராஜ்குமார் ஆகியோர் பயிற்சியளித்தனர்.