போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பாதியளவு அரசு பஸ்கள் மட்டுமே இயக்கி வருகிறது. இந்நிலையில் மாற்று பணி மூலம் டிரைவர், கண்டக்டர்களை இயக்கி அரசு பஸ்களை இயக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். பெரம்பலூரில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் பாலக்கரை மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இப்போராட்டத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள், தொ.மு.ச, சி.ஐ.டி.யூ., ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, மறுமலர்ச்சி தொழிலாளர் சங்கம் மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்கம், பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்றோர் சங்கம் தே.மு.தி.க., மத்திய சங்கம் உட்பட பல சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.