Truck-bus collision near Perambalur; 2 dead: 6 injured!
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள ஈச்சங்காட்டில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று ரயில் தண்டவாளங்களுக்கு பயன்படுத்தும் இரும்பு ராடுகளை ஏற்றிக் கொண்டு திருச்சியை நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
பெரம்பலூர் மாவட்டம் பாடலூருக்கும்-நெடுங்கூருக்கும் இடையே சென்று கொண்டிருந்த போது, 50க்கும் மேற்பட்டபயணிகளுடன் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து டிரெய்லர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஆம்னி பேருந்தில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டம், பழவிளை கிராமத்தை சேர்ந்த பிரதீஸ்(30), விருதுநகர் மாவட்டம், சிவந்திபுரம் கிராமத்தை சேர்ந்த அந்தோணி ராஜ்(51), ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் இருவர் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நான்கு பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குறித்து வழக்கு பதிவு செய்த பாடலூர் போலீசார் விபத்துக்கு காரணமான லாரி மற்றும் ஆம்னி பேருந்து டிரைவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆம்னி பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்ட நிலையில், முன்னே சென்ற லாரி திடீரென குறைந்த வேக வழித்தடத்திலிருந்து, அதிவேக வழித்தடத்திற்கு திருப்பப்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, கன்டெய்னர் லாரிக்கு வெளிப்புறமாக சுமார் 6 அடி தூரத்திற்கு இரும்பு ராடுகளை ஏற்றி வந்ததால், பேருந்து மோதியதில் இரும்பு ராடுகள் மோதி உயிரிழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்திருக்கிறது.