Two killed in road accident near Perambalur
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் சென்னையை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சென்னை ஆலந்தூரை சேர்ந்த மணி(வயது 25), குல்லு(24) பாஸ்கர்(22), நவநீதன்(25), கௌதமன்(25) நண்பர்களான இவர்கள் 5 பேரும் ஒரு காரில் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர்.
இவர்கள் வந்த கார் இன்று காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் இரூர் அருகே வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் (சென்டர் மீடியன்) மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மணி, குல்லு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற மூவரும் படுகாயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.