Ugati New Year : PMK founder Ramadoss greeting to Telugu and Kanada People

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள உகாதி திருநாள் வாழ்த்து!

தெலுங்கு, கன்னட புத்தாண்டான உகாதி திருநாளைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலங்களுக்கிடையில் ஆற்று நீர் பிரச்சினைகள் உள்ளிட்ட ஆயிரம் மோதல்கள் இருந்தாலும் யாதும் ஊரே… யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடலுக்கு ஏற்ப தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களை தமிழக மக்கள் தங்களின் சகோதரர்களாகவே பார்க்கின்றனர்.

தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் அனைத்து வசதிகளுடனும், சுதந்திரமாகவும் வாழ தமிழகம் வகை செய்துள்ள அதேநேரத்தில், தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் பெருமளவில் பங்களித்திருக்கிறார்கள்.

தமிழர்களுடன் மொழியால் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் உணர்வால் தமிழர்களின் சகோதரர்களாகவே வாழ்கின்றனர். அவர்களையும் சகோதரர்களாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.

தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதிலும், நாட்டையும், மாநிலத்தையும் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் நடைபோடச் செய்வதிலும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கும் பங்கு உண்டு.

இதை உணர்ந்து அவர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை உகாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!