United States at UN climate conference Wasted 24 Years!
பசுமைத் தாயகம் மாநிலச் செயலாளர் இர. அருள் விடுத்துள்ள தகவல்:
11.9.2018: அமெரிக்க நாடு உலகை அழிக்கும் வில்லானாக அவதாரம் எடுத்துள்ளது. பணக்கார நாடுகள் பலவும் அமெரிக்காவின் பின்னால் ஒளிந்துகொண்டு, வளரும் நாடுகள் மீது காலநிலை போரினை தொடுத்துள்ளன. கடந்த வாரம் நடந்த பாங்காக் காலைநிலை பேச்சுவார்த்தையின் (Bangkok Climate Change Conference) போது – வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு நிதி அளிப்பது குறித்த விதிகளை உருவாக்க மறுத்தும், பாரிஸ் காலநிலை உடன்படிக்கைக்கான உறுதியான விதிகளை ஏற்க மறுத்தும் – உலகின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது அமெரிக்கா!
அமெரிக்கா: உலகை அழிக்கும் வில்லன்!
புவி வெப்பமடையவும், காலநிலையில் மாற்றம் ஏற்படவும், பெரும் வெள்ளம், கடும் புயல், வரலாறு காணாத வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் தாக்கவும் – அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பணக்கார நாடுகள் தான் காரணம். மக்கள் தொகையில் கால்பங்கு அளவே உள்ள பணக்கார நாடுகள், வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயுவில் முக்கால் பங்கிற்கு காரணமாகும். அதே நேரத்தில் மக்கள் தொகையில் முக்கால் பங்கு உள்ள, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கரியமிலவாயுவில் கால் பங்கு அளவுக்கு தான் காரணமாகும்.
உலகிலேயே மிக அதிகமாக கரியமிலவாயுவை வெளியேற்றும் குற்றவாளி நாடு அமெரிக்கா தான். மொத்த வளிமண்டல கரியமில வாயுவில் 22% அளவுக்கு அந்த நாடு காரணம். இப்போதும் கூட, ஒவ்வொரு இந்தியரும் தலா ஒன்றரை டன் கரியமில வாயு வெளியேற்றத்துக்கு காரணமாக இருக்கும் போது – ஒவ்வொரு அமெரிக்கரும் 16 டன் கரியமில வாயு வெளியேற்றத்துக்கு காரணமாக உள்ளனர்.
இவ்வாறு, எந்த அமெரிக்கா உலகை அழிவின் விளிம்பில் தள்ளியதோ, அதே அமெரிக்கா தான் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் தடுத்து வருகிறது!
இழுபறியில் ஐநா காலநிலை பேச்சுவார்த்தைகள்
புவி வெப்பமடைவதை தடுத்து நிறுத்துவதற்கான விதிமுறை புத்தகத்தை (Paris Rulebook – Paris Agreement Work Programme PAWP) உருவாக்கும் ஐநா காலநிலை மாநாடு வரும் 2018 டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் கூடுகிறது. Conference of Parties (COP) 24 என்பது இந்த மாநாட்டின் தலைப்பாகும். (அதாவது, உலகநாடுகள் ஒன்று கூடி 24 ஆவது ஆண்டாக பேச்சுவார்த்தையை தொடரப்போகின்றன என்பது இதன் பொருளாகும்! முதல் மாநாடு (COP 1) 1995 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கூடியது).
போலந்தில் கூடும் மாநாட்டில் காலநிலை விதிகளை உருவாக்க ஏதுவாக, 2018 மே மாதம் ஜெர்மனியிலும், செப்டம்பர் மாதம் தாய்லாந்து நாட்டிலும் சிறப்பு காலநிலை மாநாடுகளை ஐக்கிய நாடுகள் அவை கூட்டியது. உலகின் 190 நாடுகளில் இருந்து 3000 பேர் பங்கேற்ற இந்த மாநாடுகளின் முடிவாக, 307 பக்கத்தில் காலநிலை விதி முன்வரைவு உருவாக்கப்பட்டிருக்கிறது!
ஐநா காலநிலை பேச்சுவார்த்தை என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். உலக நாடுகள் தனித்தனியாகவோ, அணி அணியாகவோ அவரவர் பொருளாதார, புவி அரசியல் சூழலுக்கு ஏற்ப, அவரவருக்கு பலனளிக்கும் வகையிலான பலவிதமான ஆலோசனைகளை முன் வைப்பார்கள். ஆலோசனைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அவற்றிலிருந்து எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் கருத்தை எட்ட வேண்டும். பின்னர் அதனை சட்டவடிவத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு உலகின் 190 நாடுகளும், உடன்படிக்கையின் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்க வேண்டும். ஒரே ஒரு நாடு, ஒரே ஒரு வார்த்தையை ஒப்புக்கொள்ள மறுத்தாலும் – பேச்சுவார்த்தை தோற்றதாக அறிவிக்கப்படும்.
இந்த அடிப்படையில் தான் இப்போது, பல முரண்பாடுகளைக் கொண்ட ஒரு வரைவு 307 பக்கத்தில் Paris Rulebook உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் 30 பக்கம் கொண்ட, முரண்பாடுகள் இல்லாத ஒரே வரைவாக மாற்றப்பட வேண்டும். அந்த வரைவினை டிசம்பர் மாதம் ஐநா மாநாட்டில் உலகின் அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்க வேண்டும்! இவ்வாறு ஒரு வலிமையான உடன்படிக்கை அடுத்த மூன்று மாத காலத்தில் உருவாக்கப்படுமா என்பது சந்தேகம் தான்!
அமெரிக்கா: கட்டுச்சோற்று மூட்டையில் பெருச்சாளி!
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு உள்ளிட்டவற்றை பயன்பாட்டை மென்மேலும் அதிகரிக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே அவகாசம் உள்ள நிலையில் – அதுகுறித்த உடன்பாட்டை உருவாக்கும் ஐநா பேச்சுவார்த்தை 24 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கிறது!
இந்த ஆபத்தான இழுபறிக்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்க நாடு ஆகும். குறிப்பாக, அந்த நாட்டிலிருந்து இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் – உலகம் அழியாமல் தடுக்கும் வலிமையான உடன்படிக்கை உருவாகிவிடாமல் அமெரிக்க அரசின் மூலம் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போடுகிறார்கள்!
ஐநா அவை மூலமாக காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் பேச்சுவார்த்தைக்கான UNFCCC அமைப்பு 1992 ஆம் ஆண்டு ரியோ புவி உச்சிமாநாட்டில் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் முதல் கூட்டம் COP 1 ஆண்டு ஜெர்மனியில் கூடியது. அப்போது முதல், இன்று வரை, ஐநா அவையின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதையே வேலையாக வைத்துள்ளது அமெரிக்க நாடு.
1997 முதல் வாய்ப்பு: அமெரிக்க துரோகம்!
முதன்முதலில் 1997 ஆம் ஆண்டு ஏற்கப்பட்ட கியோட்டோ உடன்படிக்கை (Kyoto Protocol) மூலம் – 2008 – 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையே வளர்ந்த நாடுகளில் வெளியாகும் கரியமிலவாயு அளவினை 1990 ஆம் ஆண்டு அளவுக்கு கீழே 5% குறைப்பதாக ஒப்புக்கொண்டன. ஆரம்பத்தில் இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு, அதனை பலவீனமாக்கியது அமெரிக்கா. பின்னர் 2001 ஆம் ஆண்டில் உடன்படிக்கையை நிறைவேற்ற முடியாது என அறிவித்து வெளியேறிவிட்டது.
2009 இரண்டாம் வாய்ப்பு: அமெரிக்க துரோகம்!
பின்னர் 2009 ஆம் ஆண்டில் டென்மார்க்கின் கோபன்ஹெகனில் கூடிய COP 15 ஐநா காலநிலை மாநாட்டில் – 2020 ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயுவை 40% அளவு குறைப்பது என்றும் 2050 ஆம் ஆண்டில் முற்றிலும் ஒழிப்பது என்றும் பேசப்பட்டது. ஆனால், அந்த மாநாட்டினை குழப்பி, இந்தியா போன்ற வளரும் நாடுகளும் கரியமிலவாயுவை அமெரிக்காவுக்கு சமமாக குறைக்க வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்து, மாநாட்டையே தோற்கடித்தது அமெரிக்க நாடு.
மேலும், ‘ஒவ்வொரு நாடும் எவ்வளவு கரியமிலவாயுவை குறைக்க வேண்டும் என்பதை உலகளவில் அறிவியல் பூர்வமாக முடிவுசெய்து, அதனை ஒவ்வொரு நாடும் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்’ என்கிற ஐநா வழிமுறையையும் ஒழித்துக்கட்டியது அமெரிக்கா. அதற்கு மாறாக, ‘ஒரு நாடு எவ்வளவு குறைக்க விரும்புகிறதோ, அவ்வளவு குறைத்தால் போதும்’ என விதிமுறையை மாற்றியது.
2015 மூன்றாம் வாய்ப்பு: அமெரிக்க துரோகம்!
அமெரிக்கா முன்வைத்த அடாவடி கோரிக்கைகளை – அதாவது, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளும் கரியமிலவாயுவை குறைக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் அந்த நாடு விரும்பும் அளவுக்கு குறைத்தால் போதும் என்பதை – ஏற்றுக்கொண்டு பாரிஸ் காலநிலை உடன்படிக்கை (COP 21 – Paris Climate Agreement) உருவாக்கப்பட்டது. அமெரிக்கா கரியமிலவாயுவை குறைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான பலவீனமான உடன்படிக்கை உருவாக்கபட்டது.
ஆனால், தற்பொது, பாரிஸ் காலநிலை உடன்படிக்கையையும் ஏற்க முடியாது என்று அறிவித்து அதிலிருந்து வெளியேறிவிட்டது அமெரிக்கா. ஆனாலும், பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின் படி, அதில் இணைந்த நாடுகள் அந்த உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வரவுள்ள 2020 ஆண்டில்தான் வெளியேற முடியும். எனவே, 2020 ஆம் ஆண்டுவரை பாரிஸ் உடன்படிக்கையில் அமெரிக்க உறுப்பினராக நீடிக்கும்!
இவ்வாறு 2020 ஆம் ஆண்டுவரை பாரிஸ் உடன்படிக்கையில் உறுப்பினராக இருக்கும் தகுதியை பயன்படுத்தி – பாரிஸ் உடன்படிக்கைக்கான விதிமுறைகளை உருவாக்கவிடாமல் அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுவருகிறது! அமெரிக்காவின் அடாவடியால் தான் பாங்காக் காலநிலை மாநாடு இழுபறியாக முடிந்தது. வரும் டிசம்பரில் நடக்கும் போலந்து மாநாடும் இதே போன்ற முட்டுக்கட்டையை சந்திக்கும். 2018 டிசம்பரில் விதிமுறைகள் ஏற்கப்படாமல் போனால் – 2020 ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வருவதும் சந்தேகம் தான்!
மொத்தத்தில், பாரிஸ் உடன்படிக்கை எப்படி அமைந்தாலும் அதில் அமெரிக்க நாடு இருக்கப்போவது இல்லை. அதனை அமெரிக்க அரசு செயல்படுத்தப் போவதும் இல்லை. ஆனாலும் கூட, உலகில் அமெரிக்கா தவிர மற்ற எல்லா நாடுகளும் உறுப்பினராக உள்ள பாரிஸ் உடன்படிக்கையை முற்றாக சீரழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது அமெரிக்க நாடு. அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசை வெறி உலகையே அழிக்கிறது என்பதுதான் இதற்கு பின்னால் உள்ள அரசியல் ஆகும்!
அழிவின் விளிம்பில் உலகின் எதிர்காலம்!
உலகை காப்பாற்ற, அதாவது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளை கட்டுப்படுத்த, 2020 ஆம் ஆண்டிற்குள் கரியமிலவாயு வெளியேற்ற அளவை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த வேண்டும்.
அதாவது, 1992 ஆம் ஆண்டு காலநிலை பேச்சுவார்த்தைகள் தொடங்கிய காலத்தில் உலகின் கரியமிலவாயு வெளியேற்ற அளவு 22 பில்லியன் டன் ஆக இருந்தது. இப்போது அது சுமார் 37 பில்லியன் டன் ஆகும். இந்த ஆளவு இதற்கு மேலும் அதிகரிக்காமல் 2020 ஆம் ஆண்டில் அதிகரிப்பை நிறுத்த வேண்டும். பின்னர் படிப்படியாக குறைக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக 2040 ஆம் ஆண்டுவாக்கில் இது ‘பூஜ்யம்’ என்கிற நிலையை அடைய வேண்டும்!
இதுவே வளிமண்டல கரியமிலவாயு அடர்த்தி அளவில் கணக்கிட்டால், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு 277 ppm (1 ppm என்பது பத்து லட்சத்தில் 1 பகுதி) அளவாக இருந்தது. காலநிலைக்கான ஐநா அமைப்பு தொடங்கிய 1992 ஆம் ஆண்டில் 356 ppm அக இருந்தது. கியோட்டோ உடன்படிக்கை உருவான 1997 ஆம் ஆண்டில் 364 ppm ஆக இருந்தது. கோபன்ஹெகனில் காலநிலை உடன்படிக்கை தவறவிடப்பட்ட போது 387 ppm ஆக இருந்தது. பாரிஸ் காலநிலை உடன்படிக்கை ஏட்டப்பட்ட போது 400 ppm ஆக இருந்தது. தற்போது 410 ppm ஆக இருக்கிறது!
உலகின் தாங்கும் அளவு என்பது 350 ppm தான். அதுவே, 450 ppm வரை போனால் உலகை காப்பாற்ற 50 : 50 வாய்ப்பு உள்ளது. அதற்கு மேலே சென்றால் – உலகம் பேரழிவை சந்திக்கும். தற்போது 410 ppm ஆக இருக்கிறது! இன்றைய சூழலில் 450 ppm அளவுக்கு கீழே கட்டுப்படுத்தும் போக்கில் உலகநாடுகள் செல்லவில்லை!
இந்த லட்சியத்தை சாத்தியமாக்கினால் மட்டுமே, இந்த உலகம் நமது குழந்தைகளுக்கும் பயன்படும். இல்லையென்றால் எல்லோருக்கும் பேரழிவாக முடிந்துவிடும். கடந்த 25 ஆண்டுகளாக பேச்சுவார்த்தையை மட்டுமே நடத்திக்கொண்டிருக்கும் உலகம் – அடுத்த 25 ஆண்டுகளில் எவ்வாறு பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி!
காலநிலை பேச்சுவார்த்தை எனும் கட்டுச்சோற்று மூட்டையில் கட்டப்பட்டுள்ள அமெரிக்கா எனும் பெருச்சாளியை வெளியே தூக்கி எறியாமல், உலகை காப்பாற்ற வழியே இல்லை!, என தெரிவித்துள்ளார்.