Urban Wellness Center at Aranarai in Perambalur : Tamil Nadu Chief Minister M.K.Stalin inaugurated through video conference!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தினை காணொளி காட்சி வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, கலெக்டர் க.கற்பகம், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.125 கோடி மதிப்பீட்டில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை வீடியோ கான்பிரன்ஸ் வழியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2022-23 ஆம் ஆண்டு 07.05.2022 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மானியக் கோரிக்கையின் போது சட்டப்பேரவை 110 விதியின் கீழ் தமிழ்நாடு மக்களின் சுகாதார தேவைகளை மென்மேலும் மேம்படுத்தும் விதத்தில், தமிழ்நாட்டில் 708 நகர்ப்புற நல வாழ்வு மையங்களை அமைத்திட உத்தரவிட்டார். அதன்படி முதற்கட்டமாக ரூ.125 கோடி செலவில் 500 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் தலா ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டு இன்று 06.06.2023 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இன்று திறக்கப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரையில் அமைக்கப்பட்டுள்ள நலவாழ்வு மையமும் ஒன்றாகும்.
நலவாழ்வு மையத்திற்கு வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் 12 ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் “அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின்” (UNIVERSAL, HEALTH COVERAGE) கீழ் மகப்பேறு சேவைகள், குழந்தைகள் நலம், வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள், குடும்ப கட்டுப்பாடு சேவைகள், தொற்று நோய்களுக்கான சேவைகள், பொதுவான நோய்களுக்கான சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள், மனநல மருத்துவ சேவைகள், பல் நோய் சம்பந்தப்பட்ட மருத்துவ சேவைகள், கண், காது, மூக்கு, மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள், முதியோர் நல சேவைகள், அவசர மருத்துவ சிகிச்சை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட சேவைகள் வழங்கும் பொருட்டு நலவாழ்வு மையத்தில் அரசு ஆணையின்படி, 1 மருத்துவர், 1 செவிலியர், 1 சுகாதார ஆய்வாளர் மற்றும் 1 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகியோர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர் துரை காமராஜ், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.