பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ராயப்ப நகரைச் சேர்ந்த கிராம மக்கள், ஆட்சியர் க. நந்தகுமாரிடம் மனு ஒன்று அளித்தனர். அதில் தெரிவித்துள்ளதாவது:
வி.களத்தூர் ஊராட்சியில் ராயப்ப நகரில் 600-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் இன மக்கள் வசித்து வருகிறோம். இந்நிலையில், மற்றொரு பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றும் கழிவு நீரை, எங்களது குடியிருப்பு பகுதி அருகே உள்ள கல்லாற்றில் ஊராட்சி மூலமாக கலக்க உள்ளதாக தெரிகிறது. இதனால், தற்போது எங்களின் குடிநீர் ஆதரமாக பயன்படுத்தப்பட்டு வரும் பகுதியில் கலந்தால் குழந்தை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
மேலும், இப்பகுதியில் உள்ள கால்நடைகளின் குடிநீர் தேவையும் பாதிக்கப்படும். கழிவுநீரை கல்லாற்றில் கலப்பதை தடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேப்பந்தட்டை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு அலுவலர்களின் அலட்சியத்தால், தற்போது கழிவுநீரை கல்லாற்றில் கலப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது.
எனவே, இந்த முயற்சியை தடுத்து, எங்களது குடிநீர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடையும் என தெரிவித்துள்ளனர்.